Top News

ஒலுவில் துறைமுகத்தை மூட முடியாது - கல்முனை மாநகர சபை தீர்மானம்



அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் தொடர்ந்தும் இயங்க வேண்டுமென்று, அரசாங்கத்தைக் கோரும் வலுவான பரிந்துரையை, கல்முனை மாநகர சபை முன்மொழிவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற, கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வைத் தொடர்ந்து, மேயர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், மாநகர மேயர் ஏ.எம்.றகீப்பால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், ஒலுவில் துறைமுகத்தில் கடலரிப்பால் புதையுண்டு போயுள்ள மீன்பிடிப் படகுகளை மீட்பதற்காகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும், துறைமுகங்கள் அமைச்சும் கடற்றொழில் அமைச்சும் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும், மாநகர சபைத் தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பருவ மாரி காலத்தில் ஏற்படக்கூடிய கடல் சீற்றத்தில் இருந்து மீனவர்களின் பாரிய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தீர்மானத்தில் கல்முனை மாநகர சபை வலியுறுத்தியுள்ளது.
Previous Post Next Post