கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை இரவு கற்பிட்டியில் இடம்பெற்ற விழிப்புணர்வு கூட்டத்திலேயே சந்ததி காக்கும் சரித்திர பிரகடனம் எனும் தொனிப்பொருளில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது. கற்பிட்டி ஒன்றிணைக்கப்பட்ட சிவில் சமூகம் ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் க்ளீன் புத்தளம் அமைப்பினர், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நிற்க, கற்பிட்டியைச் சேர்ந்த அயாஷ்கான் ஆசிரியரினால் இந்தப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டமானது எங்களது இருப்பின் மீதும், எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்வின் மீதும், சுற்றுப் புறச் சூழல் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு உயிரியல் யுத்தம் என்பதை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு மக்களாகிய நாம் உளப்பூர்வமாக இன, மொழி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஏற்றுக்கொள்கிறோம். புத்தளம் மக்களாகிய நாம் எமது எதிர்கால சந்ததியினர் நன்மை கருதியும், நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி கொள்கையை கட்டியெழுப்புவதற்கும் முக்கிய தீர்மானங்களை இதன்போது அறிவிக்கின்றோம்.
புத்தளம் மாவட்டத்தின் அறுவாக்காட்டு திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டமானது நிலையான அபிவிருத்திக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும், நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்விற்கும் பாரிய சவாலாக அமையும். அத்துடன், தேசிய அரசாங்கம் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று புத்தளம் தேர்தல் தொகுதியின் புத்தளம் நகர சபை, வன்னாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களும் திட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அத்தோடு, புத்தளத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்த அறுவாக்காட்டு குப்பைத் திட்டத்திற்கு எதிராக தங்களது நேரடியான கருத்துக்களை கட்சி, அரசியல் மற்றும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி புத்தளம் மக்களின் எதிர்கால நன்மை கருதி அதனை ஊடக அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் பிரகடனம் செய்கிறோம்.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் உண்மையான குடிமக்கள் என்ற ரீதியிலும், இந்த நல்லாட்சி அரசை உருவாக்கியவர்கள் என்ற ரீதியிலும் புத்தளம் மக்களின் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு இந்த திட்டத்தை கைவிடாது பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதுடன் எந்த அரசியல் தலைமைகளுக்கும் ஆதரவாக ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எமது வாக்குகளை அளிக்காமல் என்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என புத்தளம் மக்களாகிய நாங்கள் பிரகடனம் செய்கிறோம். புத்தளத்தில் சீமெந்து, அனல் மின்சாரம் ஆகிய திட்டங்களினால் சூழல், சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக உருக்குளைந்து போகின்றோம். எனவே இவை தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து மக்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக அரசுக்கு உரிய முறையில் ஆவணம் செய்யக் கூடிய சுயாதீனமாக இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு ஊடாக எங்களது பிரதிநிதிகளும் செயற்பட்டு உண்மையான தீர்வுப் பொதியொன்று எங்களுடைய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் நாம் பிரகடனம் செய்கிறோம் என வாசிக்கப்பட்ட போது அனைவரும் கைகளை உயர்த்தி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.