நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அந்த வகையில் களுகங்கை, களனி கங்கை, ஜின் கங்கை, நில்வளா மற்றும் அத்தனலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் களுகங்கைக்கு அண்மித்ததான மதுராவல, ஹொரணை, புளத்சிங்கள, இங்கிரிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மக்களுக்கும் ஜின் கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களான பத்தேகம, நாகொட, வெளிவிட்ட தவலம, நெலுவ ஆகிய பிரதேசங்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் கடுவள, பியகம, களனி, கொலன்னாவ பிரதேசங்களுக்கும், அத்தனகலு ஓயாவுக்கு அண்மித்த பிரதேசங்களான நீர்கொழும்பு மினுவன்கொட, ஜாஎல, கம்பஹா பிரதேச செயலகங்களுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இந் நிலையில் சீரற்ற வானிலையினால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 1200 படையினர் தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.