Top News

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களுக்கு வயிறு பற்றியெரிந்த சம்பவம்.


இந்த நாட்டில் எப்போது முஸ்லிம் காங்கிரஸ் உதயமானதோ அன்று தொடக்கம் பேரினவாதிகளுக்கு வயிறு பற்றி எரிய ஆரம்பித்து விட்டது. அதன் விளைவுகள் தான் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு பேரினவாத சக்திகள் துடித்துக் கொண்டிருக்கிறது.

மரத்தைத் தறிப்பதற்கு கோடாரிக்காம்புகளாக மரத்தைப் பயன்படுத்துவது போல், இந்தக்கட்சியை அழிப்பதற்கு இந்தக்கட்சியூடாக முகவரி பெற்றவர்களையே இந்த பேரினவாத சக்திகள் பயன்படுத்தி வருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் விருட்சமாகி கனி தரும் வேளையில், இதன் வளர்ச்சியில் எவ்வித பங்களிப்பும் செய்யாதவர்கள் இதற்குள் வந்து கனிகளைப் பறித்து சுவைத்தார்கள். சுவைத்தது மாத்திரமல்லாமல், தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொள்வதற்கு மரத்தையே விலை பேசி விற்று விட்டார்கள்.

இவர்களுக்கு சிம்மசொர்ப்பனமாக இருப்பவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், அதுமாத்திரமில்லாமல் இவர்களின் அரசியல் மூலதனமாக ஹக்கீம் அவர்களை வசைபாடுவதையே கொண்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.

முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் ஆரம்ப காலந்தொட்டு எவ்வித தியாகமும் செய்யாது, அர்ப்பணிப்புகளுடன் செயற்படாதவர்கள் கட்சியைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, கட்சியைக்காட்டிக் கொடுத்து அமைச்சுப்பதவிகளைப் பெற்றனர்.

அத்துடன், குறுகிய காலத்திற்குள் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பம் காலந்தொட்டு மர்ஹும் தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்கு பக்கபலமாகச் செயற்பட்ட அன்றைய செயலாளர் றவூப் ஹக்கீம் அவர்கள் எந்த வகையில் குறைந்து போய் விட்டார்கள்.

செல்வந்தக்குடும்பத்தின் மருமகன். ஒரு கட்சியின் செயலாளராக தனது கடமைகளைச்செய்த விதம் தான் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் வயிறு பற்றுமளவுக்கு கொண்டு போனதென்பதற்கு எடுத்துக்காட்டாக கீழ் வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

"1994இன் ஆரம்ப காலப்பகுதியில் மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் பிரதேச சபைத்தேர்தலுக்கான முஸ்தீபுகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு இடைவெளி நிரப்பப்படாமல் வெளியேறக்கூடாதென்ற அஷ்ரஃபின் அறிவிப்பின் பின்னர் முஸ்லிம்கிடையே ஏற்பட்டிருந்த சரிவை நிமிர்த்திக்கொள்ள மு.கா. இத்தேர்தலைப் பயன்படுத்தவும் வேண்டியிருந்தது.

தலைவர் அஷ்ரஃப் பிரேமதாஸ ஜனாதிபதியாவதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறி, இலங்கை சமூகத்திடம் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த நிலையிலும் கூட, பிரேமதாஸவின் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த அமைச்சர்கள் மு.காவைச் செல்லாக் காசாக்குவதில் தமது அதிகாரம் முழுவதையும் பாவித்த காலமது.

அது மட்டுமன்றி, அக்காலத்தில் புலிகள் முஸ்லிம்களை மாற்றுக்கண் கொண்டு பார்த்தும் மு.காவை தனது எதிரியின் இயக்கமாகவும் கருதி வந்த - மு. கா வுக்கு மிகுந்த சோதனைகள் அக்காலத்தில் நிறைந்திருந்தது. சேகுஇஸ்ஸதீன் கட்சியிலிருந்து இடைவிலகியவுடன் தனியே முஸ்லிம் கட்சி என்ற பெயரில் மாற்று இயக்கமொன்றை உருவாக்கி தென் கிழக்கு முஸ்லிம்களிடையே ஒரு வகையான உளவியல் பிரதேசவாதம் தலை தூக்க வித்திட்டிருந்தது.

அவ்வாறான கஷ்டமான காலப்பகுதியில் செயலாளர் என்ற பாரிய சுமை றவூப் ஹக்கீமிதோள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
பிரதேச சபைத்தேர்தவுக்கான வேட்புமனுக்களின் நிறைவு நாளுக்கு முதல் நாளிரவு வேட்பு மனுக்களை இறுதியாக சரி பார்த்துக்கொள்ள தலைவர் அஷ்ரஃபின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சம்மாந்துறை வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நெருக்கடிகளின் காரணமாக தலைவர் அஷ்ரஃபுக்கு தலைவலி ஏற்பட அந்த வீட்டின் விறாந்தை வழியாக முன் மண்டபத்துக்கு அவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த விறாந்தையில் கிடந்த பாயில் ஒரு மெல்லிய இளைஞன் தலையணைக்குப் பதிலாக தன் வலக்கரத்தை உபயோகித்தவாறு ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருந்தார். அவருக்கும் விறாந்தையின் சுவருக்குமிடையே ஆவணப் பையொன்று இருந்தது. யாராவது அந்த ஆவணப்பையைத் தொட்டால் தூங்குபவர் எழுந்து விடத்தக்கவாறு அந்தப்பை கவனமாக வைக்கப்பட்டிருந்தது.

உடனே அதனை நோட்டமிட்ட அஷ்ரஃப் அவருக்குப் பின்னால் வந்தவரிடம், Do you know about this boy who is sleeping on a mat? என்று வினவ அவரும் நம்முடைய றவூப் ஹக்கீமல்லவா? என்று கூறினார். அதற்கு மீண்டும் அஷ்ரஃப் அவரின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டு விட்டு பின்வருமாறு தொடர்ந்து கூறினார்.

இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களில் ஒருவரின் மகளைத்திருமணம் செய்த மருகன் இவர். இப்படி பாயில் தலையணையுமில்லாமல் தன்னிடம் வழங்கப்பட்ட ஆவணங்களைக் கவனமாக அரவணைத்தபடி படுத்துக் கிடக்கின்றார். எனக்கு இதனைப்பார்க்க வயிறு பற்றுகின்றது.

அது மட்டுமன்றி, நாளை அதிகாலை நாலு மணிக்கு வாகனமும் இல்லாமல் பஸ்ஸிலே சென்று திருகோணமலை கச்சேரியில் இந்த வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்ய இவர் பணிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட தியாகத்தழும்புள்ள இளைஞர்கள் நமது இயக்கத்தில் இருக்கும் வரை நமது போராட்டம் தோல்வியடையப் போவதில்லை என்று தலைவர் மனம் நெகிழ்ந்து கூறினார்.

அப்படியொரு பலமான நம்பிக்கையை அஷ்ரஃப் ரவூப் ஹக்கீம் மீது கொண்டிருந்தார். மேற்படி சம்பவத்துக்கு சம்மாந்துறையில் பல வாழும் சாட்சிகள் உள்ளன"(ஷப்நம்)

இவ்வாறு பல தியாகங்கள் செய்து தனது தலைமைக்கு விசுவாசமாகச் செயற்பட்டதன் காரணமாகவே இன்றும் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற தலைவராகவும் எதிரிகளுக்கு சிம்மசொர்ப்பனமாகவும் திகழ்கிறார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி.
Previous Post Next Post