இனைப்பு 2
கல்வி எமது உரிமை. இவ் உரிமைகளை சீரளிக்காதே!!
பொலிசார் சட்டத்தை அமுல்படுத்தவில்லை!!! அரசே!
விரைந்து நடவடிக்கை எடு!!!
என்ற கோஷங்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் 22.10.2018 திங்கட்கிழமை காலை 9 முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சில கோரிக்கைகளை முன்வைத்து சில மானவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை ஆக்கிரமித்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன்காரணமாக பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. பல்கலைக்கழக நிர்வாகிகள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி குறித்த மாணவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பல்கலைக்கழகத்தை சுமுக நிலைக்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள்,நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து குறித்தபோராட்டத்தில் குதித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தொகுதியை ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கு எதிராக பொலிசார் சட்டத்தை அமுல் படுத்தாமல் இருப்பதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பல்கலைக்கழகத்தை ஸ்தம்பிதப்படுத்தும் விதத்தில் ஒருசில மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நிர்வாகக்கட்டிட ஆக்கிரமிப்பு சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவர்களுக்குப்பின்னால் பல்கலைக்கழகத்தை மலினப்படுத்த நினைக்கும் வேறு சக்திகளின் தூண்டுதல் இருக்குமோ என சந்தேகம் உள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கு எதிராக பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பொலிசார் காட்டும் அசமந்தமான போக்கு, நல்லாட்சியில் அரச நிறுவனத்துக்கே பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அரசு தனது கண்ணை திறக்கவேண்டும் என்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை வைத்து அரசாங்கத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளதாகவும் போராட்டாக்காரார்களால் கூறப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் இதயமான நிர்வாக கட்டிடத்தொகுதியின் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களும் ஊழியர்களும் குறிப்பாக பல்கலைக்கழகம் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாகவும் இம்மாதத்துக்கான சம்பளத்தைக்கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.