மீள்குடியேற்ற பாடசாலைகளில் நிலவும் கட்டிட வசதிகள் உள்ளிட்ட பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கல்வி அமைச்சும் மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
துரித கிராம வசந்தம் 2020 திட்டத்தின் மூலம் சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்படுள்ள பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
யுத்தத்தால் பாதிப்படைந்த மீள்குடியேற்ற கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் பௌதீக வள பற்றாக்குறை பாரியளவில் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளோம்.
இவ்வாறாக வளப்பற்றாக்குறை நிலவும் பாடசாலை தொடர்பான தரவுகளை வலயகல்வி அலுவலகம், மாகாண கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்களின் மூலம் பெற்று அதை அடிப்படையாகக்கொண்டு அப்பாடசாலைகளுக்கான பௌதீக வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு