Top News

ஹகீம், ரிஷாட்டுக்கு பொது ஜன பெரமுன அழைப்பு!

நல்லாட்சி அரசின் கொள்கைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகள் முன்வர வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் ஜிஹான் ஹமீத் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.


சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைத்து, குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததால் எழுந்த அரசியல் நெருக்கடிக்கு, நிரந்தர தீர்வுகாணவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட அரசியல் அனுபவுமுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி உள்ளார்.

தம் மீது நம்பிக்கை வைத்து ஆதரித்த முஸ்லிம்களுக்கு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெரும் முட்டுக்கட்டையாக செயற்பட்டுள்ளது. ஐரோப்பிய, சியோனிச நாடுகளின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி, நாட்டு மக்களையும் முஸ்லிம்களையும் நடுத்தெருவில் கைவிடவே ரணில் முயன்றுள்ளார். இதையும் விட மேலாக, குறுக்கு வழியால் சென்று ஜனாதிபதியின் ஆசனத்தையும் அவர் குறிவைத்து செயற்பட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகளே ஜனாதிபதிக்கு ரணில் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அடி பணிந்து, முஸ்லிம் விரோத சக்திகளான சியோனிசத்தின் திட்டத்தை அமுலாக்கும் ரணிலின் முயற்சியை தோற்கடிக்கவே, ரணில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அடிபணியாது புலிப் பயங்கரவாதத்தை ஒழித்து மூவின மக்களையும், தேசப்பற்றில் ஒன்றிணைத்த நீண்ட அனுபவமுள்ள மஹிந்வை பிரதமராக்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக, கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்குச் செய்த அளப்பெரும் சேவைகள், இலங்கையின் வரலாற்றில் நீடித்து நிலைக்கும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசியலில் பல பதவிகளை வகித்து, முதிர்ச்சி அடைந்த மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும்.

முஸ்லிம்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது இருந்த நம்பிக்கையை அந்நியப்படுத்தி, தூரப்படுத்தியதுடன், வெளிநாட்டு சக்திகளுக்கு சாதகமான ரணிலின் அரசாங்கத்தை உருவாக்கவே, கடந்த காலங்களில் டயஸ்போரா இணைந்துள்ளமை தெளிவாகின்றது.

இவ்வாறான சதி முயற்சிகள் தொடர்பில், இனிமேலாவது முஸ்லிம் தலைமைகள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் ஜெஹான் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post