Top News

தோசை போடத் தெரியாதோரே இன்றைய சில தமிழ் பிரதிநிதிகள்

அரசியலில் தோசையை எப்போது திருப்ப வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என மறைந்த மலையகத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் கூறுவார். எனினும், தோசையே போடத் தெரியாதவர்களே தற்பொழுது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

நெருக்குதல்களைக் கொடுக்காது தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் தீர்வை எவ்வாறு பெறப் போகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தமிழ்த் தலைமைகளை நாம் கொண்டிருப்பது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த 'சூழல் அரசியலும் நில அபகரிப்பும் யுத்தத்தின் பச்சை முகம்' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற உரை அரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடமாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்து ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாகாணசபை சென்றதும் அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் மேலும் இரண்டு வருடங்கள் நீடிப்பைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
புதிய புதிய சட்டங்களை உருவாக்கி மக்களின் பூர்வீக குடியிருப்புக் காணிகள் அரசுடமைகளாக்கப்பட்டு வருகின்றன. மக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றுவதும் அவர்கள் நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ள முடியாமல் தடுப்பதும் என பலவித வழிகளில் இந்தப் பச்சை யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் எமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை நல்குவதும் தமிழ் மக்களின் ஏகோபித்த குரல்களுக்கு எதிராக அரசுக்கு வக்காளத்து வாங்குவதுமான நிகழ்வுகள் எம்மை வெட்கித்தலைகுனிய வைக்கின்றது. ஒரு இனத்தையே இல்லாமல் அழிப்பதும் அவர்களின் இருப்பிடங்களை இல்லாமல் செய்வதுக்குமான செயல்களுக்கு எம்முடைய தலைமைகள் துணை போகின்றன.
ஜனாதிபதி செயலணிக் கூட்டத்துக்குச் செல்லாது நான் பகிஷ்கரித்தேன். தீர்வொன்றைப் பெறும்வரை இதனை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கைவிடுத்தேன். எனினும், அதனை கவனத்தில் கொள்ளாது அவர்கள் ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
எமது பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்குப் போகாது வருட முடிவின் முன் அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று நெருக்கடி கொடுக்க இதுவே தருணம் என எதிர்க்கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டினேன். அவர் அவர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்த செயலணிக் கூட்டத்திற்கு நாம் சென்றேயாக வேண்டும், அரசியல் தீர்வும் பொருளாதார முன்னேற்றமும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்று கூறி எம்மவர் அடுத்த கூட்டத்திற்கு ஆஜரானார்கள். நெருக்குதல்களைக் கொடுக்காது தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் தீர்வை எவ்வாறு பெறப் போகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தமிழ்த் தலைமைகளைத் தான் நாம் இன்று கொண்டுள்ளோம். கடைசியில் தீர்வு எதுவும் கிட்டாது. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள முதலீட்டாளர்களை வடக்குக்கு கொண்டு வருவதாகவே இது முடியும். அடுத்த கிழமை முதல் ஆளுநர் பொறுப்பேற்ற பின் அவருடன் இணைந்து அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் இரண்டு வருடங்கள் நீடிப்புப் பெற சகல நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார், அரசியலில் தோசையை எப்போது திருப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று. தோசையே போடத் தெரியாதவர்கள் தான் எமது பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.
நீண்டகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்து பெறமுடியாத வெற்றிகளை, இன்று அரசு இரத்தம் சிந்தாமல், சந்தடிகள் எதுவுமின்றி, இவ்வாறான திணைக்களங்களின் உதவிகளுடன் முன்னெடுப்பதற்கு அரசின் முகவர்களாக விளங்கக்கூடிய எமது உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள் என்றார்.
Previous Post Next Post