Top News

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் நிலைப்பாடுகளே விடுதலைப் போரை வீழ்த்தியது!



நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று.1956,1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன. சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக தனிமைப்படுத்தியதும் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான். 1990க்கு பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், வெளிநாடுகளில் புலிகளுக்கிருந்த ஆதரவுகள், அனுதாபங்கள் இல்லாமல் போனதற்கும் முஸ்லிம்களின் இந்த வெளியேற்றமும் மறைமுகப் பங்காற்றியது.

இதன் பின்னணிகளில் கூர்மையாகக் கவனம் செலுத்திய இலங்கை அரசாங்கம் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டத்துக்கான தீர்வுகளை பின்னடிப்பதற்கு, தமிழரையும் முஸ்லிம்களையும் பிரித்தாளத் தொடங்கிற்று. இதற்காக தமிழ் மொழிக்கான போராட்டம் வெடித்துள்ள அதே தளத்தின் தாய் மடிக்குள்ளிருந்து பிளவை வளர்க்கவும் சிங்களத் தேசியம் தருணம் தேடிக் கொண்டிருந்தது. இந்தத் தருணத்தை சிங்களத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்தது முஸ்லிம்கள் மீதான புலிகளின் சந்தேகப் பார்வைகளே.

இந்தச் சந்தேகங்களைக் களைவதில் மிதவாதப் போக்குள்ள ஜனநாயக தமிழ் தலைமைகள், சரியாகப் பங்காற்றி, புலிகளின் தவறான நிலைப்பாடுகளை மாற்றுவதற்கு வெளிநாடுகளூடாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளும் வடக்கு, கிழக்குப் போராட்டத்தில் அக்கறையுடன் செயற்பட்டிருக்கும். இவ்வாறு வெளிநாடுகளின் அக்கறையும் தமிழ் தலைமைகள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையும் வெல்லப்பட்டிருந்தால் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் தோற்றிருக்காது. பாரியதொரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் பொதுவான மொழி, பொது வாழிடம், பொதுக் கலாசாரம், பொதுப் பொருளாதாரங்களுடன் ஒன்றித்து வாழும் பெரும் மக்கள் கூட்டத்தினருக்கு பௌத்த சிங்களத்துக்குச் சமமான ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுத்தருவதில் வெளிநாடுகள் நழுவிக்கொண்டது ஏன்? புலிகளின் போராட்டம் தொடர்பில் சில தமிழ்த் தலைமைகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நிலைப்பாடுகளை எடுத்தமையும், முஸ்லிம்கள் தொடர்பில் புலிகளுக்கிருந்த முரண்பாடுகள், சந்தேகங்களை களையத் தவறியதுமே இதற்கான காரணங்களாகும்.

நீண்டகால வரலாறுடைய வடபுலத்து முஸ்லிம்களை இருமணி நேரம், 24 மணி நேரம், 48 மணி நேரம் என வெவ்வேறு கால அவகாசங்களில் வெளியேற்றியதில் புலிகளுக்கு பல அரசியல், இராணுவ நோக்கங்கள் இருந்தன. தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக மட்டுப்படுத்தி வடக்கில் முஸ்லிம்கள் கைவிட்டுச் சென்றுள்ள நிலபுலங்கள் சொத்துக்களை கையகப்படுத்தல், இதனூடாக தமது போரிடும் படைகளை உற்சாகமூட்டுவது, சிங்கள அரசுகளுடன் தொடர்ச்சியாக கைகுலுக்கி வரும் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகளையும், முஸ்லிம்களையும் காட்டிக்கொடுப்பாளர்களாகக் காட்டுவது என்பவையே அவையாகும். இதற்குப் பலிக்கடாக்களானது வடபுல முஸ்லிம்களே.

இதற்கும் மேலாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு எனத் தோற்றம் பெற்ற தனித்துவ கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதுதான் பிரத்தியேக காரணமாகவும் கொள்ளப்பட்டிருக்கலாம். இவை தவிர வேறு காரணங்கள் இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. எனினும், வடபுல முஸ்லிம்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டமை, இம்மக்களின் பொருளாதார பலம், மற்றும் அன்றைய காலகட்டங்களில் வடக்கில் இருந்த உள்ளக முரண்பாடுகள் சிலவும் வெளியேற்றத்துக்கான உதிரிக்காரணங்களாகலாம்.
ஆனால், இவ்விடத்தில் இரண்டு நிதர்சனங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது. புலிகளின் இராணுவ வெற்றிகள் மட்டும் இனப் பிரச்சினைக்கான தீர்வுச் சூழலை உருவாக்கும் என்று நம்பியிருந்த மிதவாதத் தமிழ்த் தலைமைகள், இதில் முஸ்லிம்களுக்குள்ள உரிமைகள் பற்றிச் சிந்திக்காமை, ஏற்கனவே வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள அழைக்க புலிகளை வலியுறுத்தாதமை, என்பவை தமிழ் தலைமைகள் மீதான இடைவெளியை மேலும் தூரமாக்கியது. இவ்விடத்தில் முஸ்லிம் தலைமைகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

கிழக்கில் உதித்த முஸ்லிம் தனித்துவ கட்சி தன்னை உறுதியாக நிலைப்படுத்திக்கொள்ள வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை இனவாத மூலதனமாக்குவதுடன் மட்டும் நின்று கொண்டது. புலிகளுடனோ அல்லது தமிழ் மிதவாதத் தலைமைகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தி வடபுல முஸ்லிம்களை மீள அழைக்கும் உறவை வளர்க்காதமை இவ்விரு சமூகங்களுக்கு இடையிலும் மன இடைவெளியை வலுவாக்கின.

இதேவேளை போரில் புலிகள் பின்னடைவை சந்தித்தால் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அரசியல் பேச்சுக்கு நகர்ந்தமை, இதற்காக முஸ்லிம் தலைமைகளையும் அணுக முயற்சித்தமை, இவ்விரண்டு வகையான இரட்டை நழுவல் போக்குகளே வடக்கு,கிழக்கு விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து, தமிழ் மொழிச் சமூகத்தினரையும் தனிமைப்படுத்தியுள்ளன.

-சுஐப் எம்.காசிம்-

Post a Comment

Previous Post Next Post