பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளவேளையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அரசியல் யாப்பிற்கு அமைவான அதிகாரம் இல்லை என்பதை பிரகடனப்படுத்துமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மீதான மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் 10உம் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனால் இந்த மனுவும் அதனுடன் தொடர்புபட்டிருப்பதனால் அன்றையதினம் கவனத்தில் எடுத்துகொள்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் இருவரைக்கொண்ட மூவர் அடங்கிய குழு இன்று தீர்மானித்தது.
இந்த மனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் இடைக்காலதடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக அறிவிக்குமாறுகோரி இந்த மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். உயர்நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு ஒன்றை விதித்துள்ள வேளையில் பாராளுமன்றத்தை கூட்டாது அதேநிலையில் பாராளுமன்றம் இருக்கவேண்டும் என்று மனுதாரர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை அமுல்ப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடையுத்தரவை பிறப்பித்தது. இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இதற்கு அமைவாக இந்த வர்த்தமானியில் குறிப்பிட்ட வகையில் எதிர்கால நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் .