பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாணந்துறை தொட்டவத்த பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் தீயினால் எரிந்து முழுமையாக சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் இவ்வனர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்ட்ரல் ஹார்ட்வெயார் எனும் இரும்புக் கடையொன்று, பிளாஸ்ரிக் அலுமினியம் கடையொன்று, புடவைக் கடையொன்று மற்றும் இரும்புப் பொருட்களுடன் தொடர்புபட்ட கடையொன்று என நான்கு கடைகள் தீயினால் முற்றாக எரியுண்டுள்ளன.
“எங்களது ஹார்ட்வெயார் கடைக்கு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டமேற்பட்டுள்ளது. நாம் அதிகமான பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு கடையை மூடிவிட்டு நான் வீட்டுக்குச் சென்றேன். சென்று சிறிது நேரத்தில் ஒரு வெடிப்புச் சத்தத்துடன் கடைக்குள்ளிருந்து தீ பரவியுள்ளது. கடைக்கு முன்னால் தங்கியிருந்தவர்கள் எனக்கு தொலைபேசி மூலம் 08.25 மணிக்கு அறிவித்தார்கள். நான் உடனடியாக திரும்பி வந்தேன். எனது கடையும் ஏனைய கடைகளும் எரிந்து கொண்டிருந்தன.
மின் ஒழுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. நான் எல்லா சுவிட்சுகளையும் பார்வையிட்டு ஓப் பண்ணியிருந்தேன். இந்நிலையில் கடைக்குள் எப்படி நெருப்பு வந்தது என்பது புதிராக இருந்தது. பொலிஸார் விசாரணைகளை நடத்தி இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
தீயணைப்புப் படையினர் ஒரு மணித்தியாலத்தின் பின்பே வந்தனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நெருப்பினை அணைக்கும் கடமைகளில் ஈடுபட்டன. என்றாலும் தீயினை முழுமையான அணைக்க முடியாமற்போனது. இதனாலே கடைகள் முழுமையாக சேதங்களுக்குள்ளாகின.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முஸ்தபா நேரடியாக வந்து நிலைமையினைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இப்பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படாவண்ணம் பாதுகாக்குமாறும் வேண்டிக் கொண்டார் என்றார்.
தீயினை அணைப்பதற்காக களுத்துறை, ஹொரணை மற்றும் மொரட்டுவை பகுதிகளிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்தும் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை தெற்கு பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் பைசர் முஸ்தபா பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், தீ பரவலுக்கான காரணத்தை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாரை வேண்டியுள்ளார்.