லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய முதித தமானகம சாட்சி வழங்கியிருந்தார்.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னின்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எழுப்பிய குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போது சாட்சிக்காரரான முதித தமானகம, 2015 ஆண்டின் பின்னர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரருக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம 125,000 ரூபா வழங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் யோசனை ஒன்றை முன்வைத்தாக தெரிவித்துள்ளார்.
இதற்கு தான் மறுப்பு தெரிவித்தாகவும், பின்னர் மாதாந்தம் 95,000 ரூபா பணம் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் இரகசிய கணக்கு ஒன்றின் மூலம் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறுவனத்தில் கடமையாற்றாத 39 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் மேலதிக விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது.