Top News

மகிந்தவுக்கு எதிரான மனு 3௦ ஆம் திகதி விசாரணைக்கு...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (26) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 30 திகதி மற்றும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் குறித்த மனுவின் பிரதிகளை பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என சபாநாயகரினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13 திருத்தத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருக்க சட்ட ரீதியான உரிமை இல்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அரசியலமைப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியை இரத்து செய்யமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post