தற்போதுள்ள சூழலில் நாம் நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேற்று (18) மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், ஆட்சியில் அமரவேண்டுமென்ற அபரீதமான ஆசையில், நாட்டில் இன்று பாரிய அரசியல் குழப்ப நிலை தோற்றிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஆணையைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியல் நகர்வுகள், சிறுபான்மை சமூகத்துக்குப் பாரிய ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதற்காகவே, சிறுபான்மைக் கட்சிகள் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைப் போக்குவதாக இருந்தால், தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக இராஜினாமா செய்து, ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், நாட்டின் நலன் கருதி, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இத்தருணத்தில் ஜனாதிபதி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டுமெனவும் பிரதமர் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்து, நாடாளுமன்றம் சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கும், அரசமைப்புக்கும் முரணான வகையில், நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்று அமைதியாக ஜனநாயக முறையில் தீர்வைப் பெற்றுக்கொள்ளவே விரும்புவதாகத் தெரிவித்தார்