Top News

"பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்கமாட்டார்கள்" ரவூப் ஹக்கீம்

அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யும் பிரேரணேயை கொண்டுவருவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்கமாட்டார்கள் என சட்டமுதுமானியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனு விசாரணை இன்று (12) ஏற்றுக்கொள்ளப்பட்டபின் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

பாராளுமன்றத்தை தான்தோன்றித்தனமாக கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதிக்கு சில கட்டுபாடுகள் இருக்கின்றன.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருக்கிறார் என்பதற்கான வாதங்களை நாங்கள் தாராளமான முன்வைத்திருக்கிறோம். பாராளுமன்ற கலைப்பு வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறுகின்ற செயல் மாத்திரமல்ல, ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்வதற்கான பிரேரணை ஒன்றை கொண்டுவருதற்குக்கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்க மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Previous Post Next Post