பாராளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் நடத்தியது.
கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து நேற்றைய தினம் மதியம் இரண்டு மணியளவில் ஆரம்பித்த இவ்வெதிர்ப்பு பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதுடன் நிறைவுக்கு வந்தது.
ஐ.தே.கவின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்காண வாகன அணிவகுப்புடன் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டு கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தை கடந்து அலரி மாளிகையருகில் பயணித்தது.
ரணில் விக்கிரமசிங்க கையசைப்பு
இப்பேரணியானது அலரி மாளிகையினூடாக பயணிக்கையில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையினுள் இருந்தவாறு பேரணிக்காரர்களை நோக்கி கையசைத்த வண்ணமிருந்தார். இதனை அவதானித்த பேரணிக்காரர்கள் தமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புக்குட்பட்ட தலைவர் அவரே, மக்களின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, தமது தலைவரை காப்பதோடு ஜனாநாயகத்தை நிலைநிறுத்தவே இப்போராட்டம் என கோஷமிட்டனர்.
கோஷங்களும், பதாதைகளும்
இதனையடுத்து அவ்விடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி நேராக சுதந்திர சதுக்கத்தை நோக்கி வந்தது. இதன்போது வீதி முழுவதும் பேரணிக்காரர்கள் வாகனத்திலிருந்து ஒலி எழுப்பியவாறும், சிறுவர்களின் விளையாட்டு பொருளான ஒலியெழுப்பும் கருவிகளை கொண்டு பேரணி பயணித்த வீதி முழுவதும் ஒலி எழுப்பியவாறு வருகை தந்திருந்தனர்.
பேரணிக்காக பயணித்த வாகனங்களில் ஜனநாயக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, அரசியலமைப்புக்குட்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, ஐ.தே.க. ஜனநாயகத்தினை நிலைநாட்டும் கட்சி, பின்கதவினால் வந்த பிரதமர் பின்கதவினாலேயே வெளியேற வேண்டும், பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை, பாராளுமன்ற பெரும்பான்மை ஐ.தே.க. வசமே என்ற பதாதைகளை ஒட்டியிருந்தனர்.
மேலும் பேரணிக்காரர்களில் சிலர் மீண்டும் அப்பம் சாபிட்ட ஜனாதிபதி வருகவே என ஜனாதிபதியை விமர்சித்த வண்ணமிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படத்திற்கு அப்ப மாலை அணிவித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அதாவது, ஜனாதிபதியின் உருவப்படமானது பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அப்பம் வழங்குவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
சர்வாதிகார ஜனாதிபதி முறையை அழித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட ஆட்சி கதிரையில் அமர்த்தப்பட்ட ஜனாதிபதி மக்கள் வரத்தை எட்டி உதைத்துள்ளார். இதனை நாட்டு மக்களாகிய நாம் எதிர்க்கின்றோம். 62 லட்சம் பேரின் வாக்குகளை விற்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு யார் வழங்கியது. இவ்வாறானதொரு ஜனாதிபதி எமக்குத் தேவையில்லை எனவும் பேரணிக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு
மாலை அணிவிப்பு
காலிமுகத்திடலிருந்து பேரணியாக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேகுணவர்தன, அசோக அபேசிங்க சுதந்திர சதுக்கத்தில் காணப்படும் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.
கொழும்பு நகரமே ஸ்தம்பிதம்
ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு வாகன பேரணியின்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நீர்த்தாரை வாகனமும், கலகமடக்கும் பொலிஸாரும் மற்றும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணி ஆரம்பிக்கப்பட்டதும் காலிமுகத் திடலுக்காக கோட்டைக்கு வரும் வீதி முற்றாக மூடப்பட்டதுடன், கொழும்பு நகரின் பிரதான வீதிகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்து போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. குறித்த போராட்ட பேரணி பாராளுமன்றை நோக்கிப் பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
-Vidivelli