Top News

உயர் நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு இன்று

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை முடிவினை இன்று உயர் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
அரசியல் கட்சிகள் சார்பிலும் சிவில் அமைப்புக்கள், சிவிலியன்கள் சிலர் சார்பிலும் இந்த 17 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று மாலையாகும் போது அதில் 13 மனுக்கள் விசாரணைகளுக்காக தயார் நிலையில் உயர் நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தன. 
இதில் 10 மனுக்கள் மீதான விசாரணை கள் நேற்று இடம்பெற்றன. ஏனைய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்.ஏ.எஸ்.டி. பெரேரா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கபீர் ஹாசிம், மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், சிவில் நபர்களான லால் விஜயநாயக்க, ஜீ.சி.டி.பெரேரா, சட்டத்தரணி அனுர லக்சிறி, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவ ஹூல், சுமனபால, சட்டத்தரணி இந்திக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 
இந்த மனுக்களில் பொறுப்புக் கூறத்தக்கவர்களாக ஜனாதிபதி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். 
இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள் அதன் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறும் மனுக்கள் மீதான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். 
நேற்றைய தினம் இந்த மனுக்கள் அத்தியாவசிய வழக்காக கருதி உடனடியாகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. நேற்று முற்பகல் 11 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இம்மனுக்கள் மாலை 5.20 மணி வரை விசாரிக்கப்பட்டன. 
இதன்போது, 10 அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவால் ஆராயப்பட்டன. 
இதன்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்தார். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பனவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலியமுனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜப்ரி அழகரட்ணமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமட்டும் சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இதனைவிட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் தத்தமது மனுக்கள் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர். 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்னஜீவ ஹூல் முன்வைத்த மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார். 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏனைய மனுக்கள் மீதான விசாரணைகளும் சட்டமா அதிபரின் சமர்ப்பணமும் இன்று இடம்பெறவுள்ளன. 
இந்த மனுக்களுக்கு மேலதிகமாக பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் சன்ன ஜெயசுமண,உதய கம்மன்பில உட்பட மூவர் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதும் இன்றைய தினம் விசாரணை இடம்பெறவுள்ளது.
Previous Post Next Post