ஷிபான் BM மருதமுனை
“கிழக்கு தேசம்” எனும் பெயரில் ஒரு கட்டுரை இன்று உலாவருவது கண்டேன். ஆழ்ந்த கவலையும் அனுதாபங்களும் கட்டுரையாளருக்கு!
கட்டுரை ரணிலை கொச்சை படுத்துவதன் ஊடாக மகிந்தரை நியாயப்படுத்தி சிறுபான்மை முஸ்லிம்களின் தலைவரான றிசாட் பதியுதீனையும் விரல் நீட்டி நிற்கின்றது.
இந்த நாட்டிலே ஒரு மாத காலமாக அரங்கேறியிருப்பது அத்துமீறலுடன் கூடியதோர் ஜனநாயகத்துக்கு எதிரான யுத்தம். ஆண்டுகொண்டிருந்த அரசையும் , ஆள ஆணையிட்ட மக்களையும் கொச்சைப்படுத்தி அதிகாரத்தினை அடாத்தாக பிடித்துக்கொள்ள பீடித்த பித்துத்தனம்.
அரியணையேற்றிவிட்ட சிறுபான்மையின் ஆதரவுக்கரங்களுக்கு ஜனாதிபதி மைத்திரி போட்ட கைவிலங்கு. ஜனாதிபதியின் சுயநலனுக்காக சிறுபான்மை தலைவர்களும் சுயம் இழப்பார்கள் எனப் போட்ட தப்புக்கணக்கு.
இவை அனைத்துமே சிறுபான்மை முஸ்லிம்களின் தலைவரான றிசாட் பதியுதீன் மூலம் முறியடிக்கப்பட்டமையும், இந்த நிமிடம் வரை ஜனநாயகத்தின் பங்காளியாக நாட்டில் உள்ள நடுநிலையாக சிந்திக்கின்ற அனைத்து இன மக்களினாலும் அவர் நோக்கப்படுவதும் வரவேற்கத்த ஒரு நிகழ்வாகும்.
இங்கு ரணில் ஆட்சி செய்வதோ, மகிந்த ஆட்சி செய்வதோ வாதம் அல்ல. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், கூட வந்த குரங்கே ஆண்டாலும் அரியணை ஏறுபவர் ஜனநாயகத்துக்கு உட்பட்ட வகையில் மக்களின் விருப்புக்கு அமைவாக ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டு அதிகாரக் கதிரையில் அமர வேண்டும். இதுவே வேண்டப்படுகிறது.
நமது எதிர்காலத்தில், நமது சந்ததிகளின் எதிர்காலத்தில், இந்த நாட்டிலே ஜீவிக்க இருக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் வரலாற்றினை புரட்டுகின்ற போது சிறுபான்மை தலைவர்கள் துரோகிகள் என்றோ அநியாயத்தின் பக்கம் துணை நின்றவர்கள் என்றோ வரலாறுகளில் இடம் பிடித்துவிடக்கூடாது. அந்த வகிபாகத்தினை தலைவர் றிசாட் பதியுதீன் செவ்வணே நிறைவேற்றியிருக்கின்றார்.
இங்கு ரணிலோ, மகிந்தவோ யாரினுடையதோ, சர்வதேசத்தினுடையதோ கூட்டாளிகள் என்பது முக்கியமல்ல. கடந்த காலத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதும் முக்கியமல்ல. இருவரினதும் முஸ்லிம் விரோத போக்கு உலகம் கண்டு வியந்த உண்மையே !
இன்றைய நாட்டின் நிலையும் போக்கும் ஒவ்வொரு பாமர மகனினாலும் நன்கு அவதானிக்கப்படுகின்றது. கேடிகள் பேசிய கோடிகளின் விபரம் காற்றின் அலைவரிசையில் இதமாக பிரகாசிக்க கண்கள் வலையமைபின் ஊடாக படம் பிடிக்கின்றன.
இந்த நிலையை குலைத்து விடுவதற்கும் மக்களை மூளைச்சலைவை செய்வதற்குமான கட்டுரையாகவே கிழக்கு தேசத்தின் கட்டுரையை நோக்க வேண்டிக்கிடக்கிறது. மேலும் மெருகூட்ட சுமந்திரனும் வடகிழக்கு இணைப்பும் மணத்துக்கு கறிவேப்பிலையாக பாவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் சர்வாதிகமே முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தினார்கள் என்ற வாதத்தையும் முன் வைத்து உத்தமர் உமரை சர்வாதிகாரியாக காட்டியமை கடுப்பை உண்டு பண்ணுகிறது. சத்திய மார்க்கத்தின் சட்டத்தின் காவலரை, அன்பிலும் பண்பாய் ஆண்ட உத்தமரையும் ஹிட்லரையும் ஒரே தரத்தில் எழுத்தாளர் பார்த்ததன் நோக்கு இவரின் தலைக்கு விலையோ? என எண்ணத்தோன்றுகிறது.
நிர்ப்பந்தத்தின் நடுவே நியாயவாதிகளாக நிற்பவர்கள் நியாயவாதிகள் கிடையாது. நமது நாட்டின் ஜனநாயகம் காத்தல் என்பது நடுநிலை வகித்தலும் அல்ல.
மக்கள் எதனை விருபினார்களோ அதனை நிறைவேற்ற நின்ற இடத்தில் நிலையாக நின்று அறம் காத்தலே ஜனநாயகம். அதனை றிசாட் பதியுதீன் சரிவரவே செய்துள்ளார். கோணல் புத்தி கொண்டவர்களுக்கு பாடம் புகட்டிய இந்த நாட்டின் ஜனநாயகத்தின் காவலரும் அவரே!! இதனை கிழக்கு தேசம் விளங்கிக் கொண்டால் சரியே!!