ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர்களிற்கும் முன்னர் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே தன்னாள் பாதுகாப்பை வழங்க முடியும் என தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ வேண்டுகோள் விடுப்பதற்காக தன்னால் பாதுகாப்பை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பையே ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின்பண்டார தயாகமகே பாலித தேவப்பெரும ஆகியோர் இந்த வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றினை பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் வழங்கியிருந்தனர்.
முன்னாள் சட்டமொழுங்கு அமைச்சர் மத்தும பண்டாரவினால் எழுதப்பட்ட கடிதத்தினையே அவர்கள் வழங்கியிருந்தனர்.
நாங்கள் அலுவலகத்திற்கு சென்றவேளை அங்கு பொலிஸ்மா அதிபரோ வேறு எந்த சிரேஸ்ட அதிகாரியோ இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடிதத்தை கையளித்துவிட்டு பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தோம் என அவர் தெரிவித்திருந்தார்.