“நாட்டின் ஜனாதிபதி நீதிக்கு முரணாக செயற்படுவாராயின் நாட்டுப் பிரஜைகள் எந்த சட்ட திட்டங்களுக்கு அடிபணிவார்கள்? ஏன் அடிபணிய வேண்டும்” என சபையில் கேள்வி எழுப்பினார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க.
இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டு தனக்கான நேரத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அனுர குமார திஸாநாயக்க,
“நாம் விரும்பும், விரும்பாத விடயங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அல்ல விடயம் நாம் அனைவரும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவர்கள்.
சாதாரண தனி நபரிலிருந்து நாட்டின் ஜனாதிபதி வரையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு அடிபணிந்து செயற்பட வேண்டிய கடமையுள்ளது.ஆகவே ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய அரசியலமைப்பிற்குட்பட்டே செயற்பட வேண்டுமே தவிர தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல.
தனி நபர் உள்ளிட்ட அனைவரினதும் அதிகார வரம்புகள் வகுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை மீறி தான்தோன்றித்தனமாக செயற்பட்ட, செயற்படும் ஜனாதிபதியுடனான எந்த வித பேச்சு வார்த்தையும் இனி பலனளிக்கப் போவதில்லை. ஆகையால் ஜனாதிபதியுடன் சபாநாயககர் அல்ல யார் பேச்சுவார்த்தைக்கு தயாராகவிருந்தாலும் நாம் தயாராக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் அதனை நாம் அறிவோம் இருப்பினும் சூழ்ச்சிகளை பேசி தீர்க்க முடியாது.
ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் மாத்திரம் செயற்பட தெரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு கேள்வியை கேட்கவும் அதிகாரமில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை பெற்ற பாராளுமன்றின் நடவடிக்கை அதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதிய அரசாங்கத்தை நியமிப்பதே ஜனாதிபதியின் கடமை. ஆனால் அதை அவர் செய்ய தவறி விட்டார்.
நாட்டின் முதல் பிரஜை ஜனாதிபதியே அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவாராயின் பொதுச் சேவையிலிருப்பவர்கள் எப்படி சட்ட திட்டங்களை மதித்து செயற்படுவார்கள் எவ்வாறு நாட்டில் நீதியை நிலைநாட்டுவது?
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து கொண்டு பிரதமருக்கான சலுகைகளை அனுபவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பயன்படுத்துவது மக்களின் பணம் அரச சொத்துக்களை முறைகேடாக யார் பயன்படுத்தினாலும் அனுமதிக்க முடியாது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துகிறார். அலரி மாளிகையில் அரசியல் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார். அவை கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டியவை அலரி மாளிகையிலல்ல.” என தெரிவித்தார்.