பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மீண்டும் அவருடைய கடமையை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) முதல் அவர் தனது கடமையை செய்ய பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமையவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் 2018 ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நியோமல் ரங்கஜீவ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதி நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கவும் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.