“நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.”
– இவ்வாறு எச்சரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்பலம் இல்லாமல் ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இது அடிப்படை ஜனநாயகம். ஆகவேதான் நாங்கள் மூன்று தினங்கள் அடுத்தடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இந்தத் தீர்மானம் முதலாவது தடவை நிறைவேற்றப்பட்டவுடனேயே ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சிறுபிள்ளைகள் பந்து விளையாடும்போது ஒரு தடவை ‘அவுட்’டானால் ‘அவுட்’ இல்லை. மூன்று தடவைகள் ‘அவுட்’டானால்தான் ‘அவுட்’ என்ற மாதிரி மூன்று தடவைகள் மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றியபோதிலும் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என்று நாங்கள் பார்க்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்” – என்றார்.