அரசியல் நெருக்கடிமிக்க இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு பாதிப்புகள் ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அது தொடர்பில் தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து தங்கள் சமூகத்தின் நலன்கருதிய தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தூதுவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக் காலை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு, இலங்கையின் அரசியல் கள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் சவூதி அரேபியாவைத் தவிர ஏனைய முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
முஸ்லிம் கட்சிகள் சார்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர், எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும் அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, ஏ. ஆர் இஸாக், எஸ்.எம். இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர்.
குறித்த சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் விளக்கமளித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்கையின் அரசியலில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமைகள் தொடர்பில் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது முதல் அண்மைக்கால அரசியல் நிலைமைகள் குறித்து தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.
ஜனாதிபதி கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்கியமை, மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்தமை, அதற்குப் பின்னரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்பட்டன.
அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளின்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் ரவூப் ஹக்கீம் விளக்கினார்.
ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாகவே தீர்மானங்களை முன்னெடுத்துள் ளதாகவும் முஸ்லிம் சமூகம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் தரப்பில் உறுதியளிக் கப்பட்டது.