ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் அலரிமாளிகையில் இன்று மாலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மஹிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பேற்றவுடன் திகன கலவரத்தின் சூத்திரதாரி விடுவிக்கப்பட்டார். இன்னும் சில தினங்களில் ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே யார் திகன கலவரத்தின் பின்னணியில் இருந்தார்கள், யார் இனவாதிகளை பாதுகாத்து இனவாதத்தை தூண்டினார்கள் என இப்போது பொதுமக்கள் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.
ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது. போராட்டம் நடாத்திய பிக்குகளுக்கு தாக்குதல் நடாத்துவது போன்று மக்களுக்கு காட்டிவிட்டு அவர்களை ஜனாதிபதி உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என சகல அதிகாரங்களையும் தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதி போராட்டம் நடாத்தியவர்களுக்கு தாக்குதல் நடாத்த தான் உத்தரவிடவில்லை என கூறுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது. இவ்வாறுதான் நல்லாட்சியிலும் எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திருப்பிவிட்டு நல்லவர் போல் மக்கள் முன் நாடகமாடினார்.
ராஜபக்சகளின் வழக்குகளை விசாரணை செய்துவந்த குற்றபுலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டது வெறும் ஆரம்பமே. தொடர்ந்தும் இவர்களின் ஆட்சி நீடித்தால் வெள்ளைவேன் கலாச்சாரத்தையும் ஊடக அடக்குமுறையையும் மீண்டும் நாம் எதிர்கொள்ள நேரிடும்.
திருடர்களை பிடிப்பதாகவும் இனவாதிகளை அழிப்பதாகவும் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதி இன்று திருடர்களுக்கும் இனவாதிகளுக்கும் துணையாக நிற்பது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.
(ஊடகப்பிரிவு)