75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில், தனது வருமானத்துக்கு அப்பால் சேர்த்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
விமல் வீரவன்ஸவுக்கு எதிராக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குக்கு தேவையான நீர், மின்சார கட்டணங்களை வெளியிடுவதற்கு தேவையான கணினி கட்டமைப்பை சோதனை செய்வதற்கு அனுமதியளிக்குமாறு, விமல் வீரவன்ஸவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
குறித்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
விமல் வீரவன்ஸ அமைச்சராகப் பதவி வகித்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேர்த்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.