இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிங்களத்தில் பரவிய இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவை உங்களது நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா என எட்வின் எழுப்பிய கேள்விக்கு, ரிச்சர் அலன் ´ஆம்´ என ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான முகப்புத்தக பதிவுகள் பரவியதனால் பல உயிர் இழப்புக்களும், உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாக எட்வின் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பதிவுகளினால் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் இலங்கையில் முகப்புத்தகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகப்புத்தக பதிவுகளை நீக்குமாறு, அப்போது இருந்த இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் வேண்டிக் கொண்ட போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன என அவர் வினவியுள்ளார்.
அதற்கு முகப்புத்தக பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.