பயங்கரவாத வழக்கில் தொடர்புபடுத்தி மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
மாலைதீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார்.
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார்.
சிறைவாசத்தின்போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார். அதற்கு மாலைதீவு அரசு அனுமதி மறுத்துவிட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுமென அரசு அறிவித்துவிட்டது.
அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலைதீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, சிகிச்சைக்காக இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. கடந்த 2016 ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலதீவில் இருந்து முகம்மது நஷீத் புறப்பட்டுச் சென்றார். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலைதீவுக்கு திரும்பாமல் இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.
பின்னர் மாலைதீவு அதிபர் பதவிக்கு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். புதிய அதிபராக இப்ராஹிம் முஹம்மது சாலிஹ் பதவியேற்ற நிலையில் முகம்மது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார். இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னர் மாலைதீவு உயர் நீதிமன்றில் முஹம்மது நஷீத் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது சட்டத்தரணி ஹிஸான் ஹுஸைன் ஆஜராகி வந்தார். கடந்த திங்களன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.
விடிவெள்ளி