கிழக்கு மாகான முன்நாள் முதலமைச்சரும், 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்'(TMVP) கட்சியின் தலைவருமான 'பிள்ளையான்' என்று அறியப்பட்ட சினேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுதலையாவார் என்று, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 11.10.2015அன்று பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சுமார் மூன்று வருடங்களாக விசாரனைக்காக சிறையில் இருந்துவருகின்ற பிள்ளையான், அன்மையில் நடைபெற இருக்கின்ற நிதிமன்ற அமர்வின் போது, விடுதலைபெற்று வெளியே வருவார் என்று அவரது கட்சி வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
பிள்ளையான் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு, கருணாவின் பிளவின் பொழுது 'கருணா குழு' என்கின்ற துணைப்படையில் செயற்பட்டு, மட்டக்களப்பில் இடம்பெற்ற பல மனித உரிமை மீறல்களிலும், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் அந்த பிராந்திய மக்களால் குற்றம் சுமத்தப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சிறுவர்களை பலவந்தமாக கடத்தி தனது அமைப்பில் இணைத்துக்கொண்டது, பாலியல் வல்லுறவு என்று ஏராளமாக குற்றச்சாட்டுக்கள் இந்த அமைப்பின் மீதும் அதன் தலைவரான பிள்ளையான் மீதும் Human Rights watch, AmnestyInternational, UTHR போன்ற மனித உரிமை அமைப்புக்களால் சுமத்தப்பட்டிருந்தன.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் படுகொலை, கிழக்குப் பல்கலைக்கழ விரிவுரையாளர் தம்மையா படுகொலை, தமிழ் புணர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் படுகொலை உட்பட பல படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் மக்களாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் பிள்ளையான் மீது சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, மகிந்த ராஜபக்ஷவின் அலோசகராக இவர் பதவிவகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.