எஸ். ஹமீத்
பாம்பும் கீரியும் ஒரே தட்டில் பாலருந்தும் அதிசயத்தைப் பார்த்ததுண்டா? பூனையும் எலியும் பூக்கொட்டி விளையாடும் புதிராட்டத்தைக் கண்டதுண்டா? அமெரிக்க அதிபரும் பின் லாடனும் ஆரத் தழுவிய ஆச்சரியத்தை அவதானித்ததுண்டா? இஸ்ரேலிய இராணுவத்தினன் காஸாவின் போராளிக்குக் கைலாகு கொடுத்த மாயத்தை இரசித்ததுண்டா? தப்லீக்கும் தவ்ஹீதும் ஒரே கொடியின் கீழ் ஒன்றான மர்மத்தையாவது அறிந்து மகிழ்ந்ததுண்டா?
ஆம் என்றால் நீங்கள் இலங்கையின் முஸ்லிம் அரசியல் வட்டத்துக்குள் தற்போது நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு மாபெரும் மந்திர ஜாலம் இலங்கை தேசத்தின் முஸ்லிம் அரசியலில் பேரொளிப் பிழம்பாய்த் தோன்றிப் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
''அரசியல்தானே…? இதிலென்ன அதிசயமும் ஆச்சரியமும் இருக்கிறது?'' என்று நீங்கள் புருவம் சுருக்காமல், விழிகள் விரிக்காமல் அசுவாரஷ்யமாக அப்பால் போவது தெரிகிறது.
''கொஞ்சம் நில்லுங்கள்…! நமது அரசியல் என்ன சாதாரணமானதா? அது நமது மார்க்கம் என்றல்லவா நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். குர்ஆனும் ஹதீதும் தமது யாப்பு என்றல்லவா நமக்குப் படிப்பித்திருக்கிறார்கள். நாரே தக்பீர் முழங்கி நாம் வளர்த்த இயக்கம் என்றல்லவா எடுத்தோதியிருக்கிறார்கள்.யா உம்மதீ (எனது சமூகமே!) என்பதன்றி ஏதொன்றுமறியாத சத்தியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தாமென்றல்லவா நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். ஸோ, அசுவாரஷ்யமாக அப்பால் நகர்வது ஆகுமா, உம்மத்தே…?
பலவாய்க் கிடந்து, ஒன்றாயிணைந்து, இரண்டாய்ப் பிரிந்து, மூன்றாய்க் கிளைத்து, நான்காய் விரிந்து, மீண்டும் ஒன்றாய் இணையும் நமது அரசியல் மூக்கின் சளி இன்னமும் நிற்காமல் ஒழுகிக் கொண்டுதானே இருக்கிறது. நன்னாரி வேர் போட்டு ஆவி பிடித்தும் நாசமாய்ப் போன சளி நிற்குதில்லையே! இங்கே நன்னாரி வேர் என்பது சமூக ஒற்றுமையை விரும்பும் பொதுமக்களும் நேர்மையான புத்திஜீவிகளும் சிந்தனை வளமிக்க உலமாக்களும் பக்கச்சார்பற்ற ஊடகவியலாளர்களும் எனக் கொள்க.
தற்போது புனித மக்க மா நகரில் இலங்கை முஸ்லிம் அரசியலுக்கென ஓர் ஒற்றுமை விதை ஊன்றப்பட்டுள்ளது. மக்கா நகரம் புனிதம் நிறைந்ததுதான். ஆனால், விதையை ஊன்றிய கரங்கள்தான் கேள்விக்குரியவை.
ஒன்றாய் இயங்குதல் பற்றிய அழைப்பு ஹக்கீமிடமிருந்து ரிஷாதுக்கு, ஹரீஸ் மூலமாக வந்திருக்கிறது. அழைப்பு விடுத்த ஹக்கீமின் கடந்த கால உறுதிமொழிகளும் சத்தியங்களும் காப்பாற்றப்பட்ட இலட்சணங்களின் தன்மை பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். வாக்குமீறல், சத்தியத் துரோகங்கள், சமூக அலட்சியங்கள், தன்னலப் பாய்ச்சல்கள் என்ற பெரும் வரலாறே ஹக்கீமுக்குண்டு. இவ்விதமெல்லாமிருக்க, றிசாத்தைத் திடீரென இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டிருப்பதன் சூட்சுமம்தான் என்ன?
ஹக்கீம் சாணக்கியர். சாணக்கியம் என்பதற்குத் தந்திரம் என்று பொருள். ஆக, ஹக்கீம் தந்திரக்காரர். தனது நலன் சார்ந்து வேளாவேளைக்குத் தந்திரமாகக் காய்களை நகர்த்தும் ஹக்கீமின் சாணக்கியத்துக்கு இப்போது றிசாத் பலியாகிவிட்டாரா?
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணிதான் ஹக்கீமின் பாதுகாப்புக் கோட்டை. இந்தக் கோட்டையிலிருந்தால்தான் அவரால் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றியைப் பெற முடியும். நடந்து கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் குழப்பத்தில் ரணிலைக் காப்பாற்ற வேண்டிய பாரிய தேவை ஹக்கீமுக்கிருக்கிறது. றிசாத்தைத் தனியே விட்டால், ஒருவேளை அவர் தன்னோடு சேர்த்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் மகிந்தவுக்கு வழங்கி, மகிந்தவை வெற்றிபெற வைத்துவிட்டால்...ரணில் தோற்று, தானும் நடுவீதிக்கு வர வேண்டியிருக்கும்…...
அதேநேரம், மகிந்தவின் அரசில் மைத்திரி ஆதரவில் றிசாத் பலம் பொருந்திய அமைச்சுகளோடு மேலும் வரப்பிரசாதங்களைப் பெற்றுச் சமூகத்திற்குச் சேவையாற்ற ஆரம்பித்துவிடுவார். அப்படி நடந்தால் ஹக்கீம் என்னும் தனது கதையே இலங்கை முஸ்லிம் அரசியலில் இல்லாமற் போய்விடும். இதனைத் தடுக்க என்ன செய்யலாம்…?
இங்கேதான் ஹக்கீமின் சாணக்கியமெனும் தந்திர மூளை வேலை செய்தது. அதன் விளைவாக, அடுத்துக் கெடுக்கும் திட்டம் ஆரம்பமானது. தயாரானது விஷப் பொறி. எதிர்பார்த்தது போலவே பொறிக்குள் சிக்கினார் றிசாத்!
விஷப் பொறியை இயக்குவதற்குப் புனிதமான மக்கா நகரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் ஹக்கீம். ஏனெனில் அதுதான் ஹக்கீம்!
ரணிலுக்குக் கிட்டத்தட்ட 130 எம்.பிக்களின் ஆதரவு இருந்திருந்தால், ஹக்கீமின் சாணக்கியம் வேறுவிதமாக இயங்கியிருக்கும். றிசாத் வலிந்து ரணிலுக்கு ஆதரவு தர முன்வந்திருந்தாலும் அவரை ரணிலின் பக்கமே வரவிடாமல் தடுத்திருப்பார் ஹக்கீம். ஏனெனில், அதுதான் ஹக்கீம்!
இப்பொழுது கூட மகிந்தவுக்கு ஆதரவைத் தராமல் றிசாத்தைத் தடுத்து நிறுத்தியது தானேயென்று கூட ரணிலிடம் ஹக்கீம் பீற்றிக் கொண்டிருக்கலாம்….ஏனெனில் அதுதான் ஹக்கீம்!
எதேச்சையாக, யாரும் எதிர்பாராத விதமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு 135 -140 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துவிடுமென்றால், றிசாதுக்கு எந்த அமைச்சையும் கொடுக்கக் கூடாது என்று முதன் முதலில் ரணிலைக் கேட்டுக் கொள்ளப் போகின்றவர் வேறு யாருமல்ல. ஹக்கீம்தான். ஏனெனில் அதுதான் ஹக்கீம்!
ம்...அல்லாஹ்தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்!