ஜனாதிபதி பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு செவிசாய்க்காவிடின் ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லாம் ஆகியவற்றை சுற்றி வளைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய நிலைமையில் நாம் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம் ஊர்வலம் போராட்டங்கள் என்பவற்றை நடத்தி வந்தோம். இவை இன்று நாடு முழுவதும் இடம்பெற்று கொண்டு இருக்கின்றன. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து சத்தியாக் கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இவை அனைத்தும் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசியலமைப்புக்கு விரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கின்றோம். இந்த செயற்பாடு இடை நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பித்ததும் அன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக எமது பெரும்பான்மையை நாங்கள் வெளிக்காட்டி இருக்கிறோம். ஆனால், நாம் வெ ளிக்காட்டிய எமது அந்த பெரும்பான்மை பலத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி தயாராக இல்லை. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தில் இருந்து கொண்டு பாராளுமன்றத்துக்குள் கையை நீட்டும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாகவே கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திகா பெர்னாண்டோ அமர்ந்திருந்தார். அவ்வாறு அமருமாறு மஹிந்த ராஜபக் ஷவே ஆலோசனை வழங்கியிருக்கிறார். முதலில் அத்துரலிய ரத்ன தேரரை சபாநாயகர் ஆசனத்தில் அமரவைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், ரத்ன தேரர் முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னரே அருந்திகா பெர்னாண்டோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
இதன்மூலம் ராஜபக்ஷ தரப்பினர் வேண்டுமென்றே பாராளுமன்ற செயற்பாட்டை குழப்புவது புரிகிறது. அதற்கு ஒரு எளிதான காரணமே இருக்கிறது. அதாவது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதே அதுவாகும். பொதுவாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியே குழப்பங்களை ஏற்படுத்தும். ஆனால், ஆளுங்கட்சிக்கு பாராளுமன்றம் சரியான முறையில் கூடுவதே அவசியமானதாக இருக்க வேண்டும்.
ஆனால், சட்ட விரோதமாக அரச அதிகாரத்தை பிடித்துள்ள இவர்கள் பாராளுமன்றத்தை சுமுகமாக கொண்டு செல்ல அனுமதிக்காமல் உள்ளனர். சபாநாயகரை வரவிடாமல் தடுக்கின்றனர். அவரது ஆசனத்தை உடைக்கின்றனர். புத்தகங்களை வீசுகின்றனர். இவர்கள் தங்களை ஆளுங்கட்சி என்று கூறிக்கொண்டாலும் இன்னும் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றனர்.
பாராளுமன்றத்தை பலப்படுத்தவோ வாக்கெடுப்பை நடத்தவோ இடமளிக்காமல் இருக்கின்றனர். பெரும்பான்மை பலம் இல்லாததாலேயே சிறிசேன மஹிந்த தரப்பு இவ்வாறு செயற்படுகிறது. இந்த பிரச்சினை பாராளுமன்றத்தில் தீர்க்கக்கூடிய ஒன்றாகும். சபாநாயகரை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளித்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம். இவர்கள் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் தீர்த்துக்கொள்ள இடமளிக்காவிடின் நாம் மாற்று வழிகளை தேடிச் செல்வோம்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் பாராளுமன்ற ஜனநாயகம் என்பவற்றை மதிக்காத இவர்கள் நிறைவேற்று அதிகாரத்துக்குள் இருந்து பாராளுமன்றத்தை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. எனவே ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளை வைத்துக்கொண்டு சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லாம் ஆகியவற்றை சுற்றி வளைப்போம். ஜனாதிபதி பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு செவிசாய்க்காவிடின் அவருக்கு பதிலளிக்க எங்களுக்கு தெரியும்.