Top News

நிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ

நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நெருக்கடி நிலைமையின் போது ஜனாதிபதிக்கு மூன்று மாத காலத்துக்கு அரசாங்கத்துக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ள அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், சாதாரண நிலைமைகளின் போது பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றே நிதியைப் பயன்படுத்த முடியும். ஜனாதிபதியின் நிதியையும் பாராளுமன்றத்தினூடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன், அரசாங்க அமைச்சுகளின் எந்த ஒரு நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு நடவடிக்கைகள் என்பன பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றம் ஏற்றுகொண்ட பின்னரே செல்லுபடியாகும்.

அதேபோல், கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கீடுகளை கண்காணிக்கும், இடை நிறுத்தும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கூட்டுத் தரப்பிடமே பெரும்பான்மை பலம் உள்ளது.அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இந்த சட்ட முரணான அரசாங்கத்தின்படி செயற்பட வேண்டாம் என அறிவித்துள்ளோம்.

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றும் முகமாக, பிரதமர் அலுவலக செயலாளரின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பிரேரணையை நேற்று சபாநாயகரிடம் கையளித்துள்ளோம்.இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதை தொடர்ந்து இந்த அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகவும் தாம் இத்தகைய பிரேரணைகளை கொண்டு வருவோம். இதன் மூலம் இந்த நிழல் ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை தாம் முற்றாக முடக்குவோம் எனவும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கூறியுள்ளனர். 
Previous Post Next Post