Top News

இன்று பாராளுமன்றம் நடக்கவே இல்லை : அது UNPயின் குழுக்கூட்டமே : நாமல்

நாடாளுமன்றில் இன்று -23- நடைபெற்ற அமர்வானது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமேயன்றி வேறு எதுவுமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்ட போது அதனை எதிர்த்து மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் குழுக்கூட்டத்தில் நாம் பங்கேற்பதில் அர்த்தமில்லை. சபாநாயகர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அந்த கூட்டத்தை நடத்திச் செல்லட்டும். அதில் நாம் பங்கேற்பதில் பயனில்லை.

122 உறுப்பினர்களின் ஆதரவு உண்டு என தம்பட்டம் அடித்துக் கொண்டவர்களின் பலம் இன்று ஒரு உறுப்பினரால் குறைந்துள்ளது. இன்று அவர்களுக்கு 121 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவளித்திருந்தனர்.ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையையும் கூட்டி கருத்து வெளியிட முடியாது.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தேவையென்றால் நாம் நிரூபிப்போம். இன்று நிலைமை வேறு. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகராக செயற்படும் போது எங்களுக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொண்டுள்ளமை வருத்தமளிக்கின்றது.ஐக்கிய தேசியக் கட்சிக்கு எது அவசியமோ அதனையே இந்த சபாநாயகர் செய்கின்றார். அவ்வாறு செய்ய முடியாது. சபாநாயகர் மிகவும் சுயாதீனமானவராக இருக்க வேண்டும்.

இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்கின்றோம்” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post