இலங்கையில் அரசியல் அதிர்ச்சிகளும் கொதிநிலைகளுமே நீடித்துக் கொண்டிருக்கின்றன. தவிர, அபூர்வங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அதிகாரப் போருக்கும், அதனூடாக நாட்டில், அனைத்துப் பரப்புகளிலும் உருவாகியுள்ள ஸ்தம்பித நிலைக்கும், ஒரு முடிவு வந்துவிடாதா என்ற மக்களின் எதிர்பார்ப்பு, இந்த நிமிடம் வரை நிறைவேறவில்லை.
சிக்கல்கள் தலைக்கு மேலால் போய்க்கொண்டிருக்கின்ற சூழலிலும்,“நான் இதிலிருந்து விலகிக் கொள்கின்றேன்” என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவும் இல்லை;“நீங்கள் சஜீத்தை அல்லது கருவை நியமியுங்கள்; நான் விட்டுத் தருகின்றேன்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறவும் இல்லை.
மறுபுறத்தில், இந்த முரண்பாடுகள் விடயத்தில் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து, சற்று நெகிழ்ச்சித் தன்மையுடன் நடந்து கொள்ள ஜனாதிபதியும் விரும்பியதாகத் தெரியவில்லை.
இவ்வாறான அபூர்வங்கள் எதுவும் நடக்காமையால், சட்டவாக்க சபையான நாடாளுமன்றமே, இன்று சீர்குலைந்திருக்கின்றது. என்னதான் நாடாளுமன்றக் கலைப்புக்கும், பிரதமர், அமைச்சர்கள் அப்பதவிகளை வகிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பதே நிதர்சனம்.
இந்தப் பின்னணியில் சட்டவாக்க சபையானது, சட்டவாட்சிக் கட்டமைப்பான நீதித்துறையின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றது.
யார் என்ன சொன்னாலும், நாட்டில் ஸ்திரமான நிலைமைகள் இல்லை. இந்தக் குழப்பங்கள், அரசியல் இழுபறிகள் மிகக் கிட்டிய காலத்தில் முடிவுக்கு வரப் போவதும் இல்லை.
சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், மிகச் சாதுரியமாக, அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு கைமாற்றுவது முதல் நோக்கமாக இருந்தது. அடுத்தது, தேர்தலொன்றுக்குச் செல்லும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
இப்போது நீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு, இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தாலும், நாடாளுமன்றத்தை வழக்கம் போல நடத்த முடியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில் சபைக்குள் இருந்து கொண்டு, ‘குழப்படி’ செய்த (மைத்திரி-மஹிந்த) தரப்பினர், இப்போது சபையைப் புறக்கணிப்பதன் மூலம், இன்னுமொரு வகையான இயல்பற்ற நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கின்றனர்.
தமக்கு அதிகாரம் கிடைக்காவிட்டால், எப்படியாவது, என்ன செய்தாவது தேர்தல் ஒன்றை நடத்தியே தீர வேண்டும் என்ற நிலையைத் தோற்றுவிப்பதே இந்தக் கூட்டுப் பங்காளிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது.
அப்படியாயின், இந்த இழுபறிகள், அதன் பின்விளைவாகவும் தொடர்விளைவாகவும் நிகழப் போகின்ற சம்பவங்கள் எல்லாம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை, நாட்டில் உணரப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்றே அனுமானிக்க முடிகின்றது.
எவ்வாறாயினும், “நாட்டில் ஏற்பட்டுள்ள இக்குழப்பங்களுக்கெல்லாம் இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் முடிவு காணுவேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்குக் கூறியிருக்கின்றார்.
இதைக் கேட்டதும், 1981களில் வெளியான ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படமும் 2001ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாருக்கு, அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது, அப்போது ஆட்சியின் தூணாக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் கடிதங்களை வைத்து, அதே தலைப்பில் எழுதிய புத்தகமுமே நினைவுக்கு வருகின்றன.
ஜனாதிபதியின் அறிவிப்பை நிறைவேற்றுவதற்கான நிகழ்தகவுகளை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, இந்த அறிவிப்பால் ஏதோ நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமைக்கு எல்லோருமே பொறுப்பாளிகள்.
2015ஆம் ஆண்டில், கூட்டாளிகளாக விளங்கிய மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது அரசியல் எதிரிகளாக மாறியிருக்கின்றனர். 2014ஆம் ஆண்டில் எதிராளிகளாக இருந்த மைத்திரி - மஹிந்த ஆகியோரிடையே, மீண்டும் அரசியலுறவு புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில், ரணிலை, மைத்திரி ‘நல்லவர்’ என்றார்; மைத்திரியை, ரணில் ‘உத்தமர்’ என்றார். எனவே, பொறுப்பான பதவிகளில் இருந்த இரண்டுபேரும், மக்களுக்குப் பிழையான தோற்றப்பாடுகளைக் காட்டியிருக்கிறார்கள் என்ற நிலைப்பாட்டுக்கே வர வேண்டும்.
இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நகர்வால், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடைய பிம்பம் (இமேஜ்) மக்களிடையே சிதைவடைந்திருக்கின்றது. ‘இவர்கள் இவ்வளவும்தானா?’ என்ற தொனியில் மக்கள் அங்கலாய்ப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக, அரசியல் ரீதியாகப் பார்த்தால், இதில் அதிக இலாபம், ஒன்றுமே இல்லாமலிருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைத்திருக்கிறது. ஆனாலும், முகம்சுழிக்கும் நகர்வுகளை வெளிப்படுத்தியதன் காரணமாக, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே, மஹிந்த ராஜபக்ஷ பற்றிய பிம்பமும் இரு மாதங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது விகாரமடைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தப் பின்னணியோடு, ஆட்சி அதிகாரத்துக்காகக் ‘கயிறிழுக்கும்’ அரசியல் தலைவர்கள், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, “ரணில் விக்கிரமசிங்க, பல கூடாத காரியங்களைச் செய்திருக்கின்றார். எனவே, எக்காரணம் கொண்டும் அவரைப் பிரதமராக நியமிக்க முடியாது” என்று ஜனாதிபதி திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி, கொலைச் சதிமுயற்சி, துறைமுகத்தின் ஒருபகுதியை, வெளிநாட்டுக்கு வழங்க முயற்சித்தமை என, ஒரு தொடரிலான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.
ஆனால், அரசாங்கமும் நாடும் மக்களுக்கானது என்றபடியால், ரணில் விக்கிரமசிங்க இழைத்ததாகச் சொல்கின்ற தவறுகளை, ஜனாதிபதி மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று, ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தவறுகள் இடம்பெற்றிருக்குமானால், அதை ஐக்கிய தேசியக் கட்சியும் வெளிப்படுத்த வேண்டும்.
நாட்டுக்கும் மக்களுக்கும் நடக்கின்ற அநியாயங்களை, மனதில் மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு, இருந்து விட்டு, தமக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற போது மட்டும், அதனை வெளியில் சொல்வது நல்லதல்ல.
ஜனாதிபதியை அழிப்பதற்கு ரணில் என்ன செய்திருந்தாலும், அதைப் பகிரங்கப்படுத்துமாறு நளின் பண்டார எம்.பி கூறியிருந்தார். இது ஐ.தே.க சார்பு நிலைப்பாடாக இருக்கலாம்.
ஆனால், உண்மையில் ரணில் மட்டுமல்ல, மற்றவர்களும் தேசிய நலனுக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக, என்ன தவறிழைத்திருந்தாலும் மக்கள் மன்றத்தில் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றாலேயே மக்கள் யாருக்கு - என்ன ‘தீர்ப்பு’ வழங்குவது என்ற தீர்மானத்தை எடுக்க முடியும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் பற்றி நோக்க வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததை எதிர்த்தாலும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட ஆட்சியை நியமிக்க, பகிரங்க ஆதரவை அளிக்கும் முடிவை இன்னும் எடுக்கவில்லை.
தமிழர்களைப் பொறுத்தமட்டில், ரணில் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும், எல்லாப் பெருந்தேசிய ஆட்சியாளர்களும் ஒன்றுதான். எனவே, வடக்கு-கிழக்கை இணைப்பது, தீர்வுத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துமூலம் முன்வைத்து, அதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கும் பட்சத்தில் ஆதரவளிக்கும் முடிவை த.தே.கூட்டமைப்பு எடுக்கலாம்.
உண்மையில், முஸ்லிம் கட்சிகளும் இப்படியான கோரிக்கை அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள், ரணில் பக்கமும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத தேசிய காங்கிரஸ் கட்சி மஹிந்த பக்கத்திலும், எவ்வித நிபந்தனையும் கோரிக்கைகளும் இன்றித் தஞ்சமடைந்திருப்பது மக்களரசியலின் இலட்சணம் அல்ல.
இது கலப்படமற்ற ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கூறினால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம்களின் ஜனநாயகமும் உரிமையும் அடையாளமும் மீறப்பட்ட எத்தனை சந்தர்ப்பங்களில், நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள்? வீதியில் கறுப்புச் சால்வை அணிந்து போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிவரும்.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கமும் இதிலிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால், இந்த ஆதரவு என்பது முற்றுமுழுதாக ஜனநாயகம் சார்ந்ததல்ல.
மாறாக, ரணில் சார்பு ஆட்சியிலேயே இவ்விரு முஸ்லிம் கட்சிகளின் அரசியல் அதிகாரமும் பதவிகளும் மிகக் கிட்டிய எதிர்கால அரசியலும் தங்கியிருக்கின்றன என்ற விடயமும் இதற்குள் இல்லாமலில்லை.
சரியாகப் பார்த்தால், முஸ்லிம் கட்சிகள் இரண்டும், தமது தீர்மானத்துக்கான காரணம் என்ன? முஸ்லிம் சமூகத்தின் எந்தக் கோரிக்கையை முன்வைத்து, குறித்த ஆட்சியாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம் என்று, இதுவரை அறிவிக்கவில்லை.
முஸ்லிம் அரசியல் நோக்கம் இலக்குத் தவறி, பெருந்தேசியக் கட்சிகளின் நலனை முன்னிறுத்தியதாக, இன்னும் நகர்ந்து கொண்டிருப்பதையே முஸ்லிம் கட்சிகளின் போக்குகள் சாடைமாடையாக வெளிப்படுத்துவதாகச் சொல்ல முடியும்.
முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தாலும், நாளை இந்த நிலைமை மாறாது என்று சொல்வதற்கில்லை.
உண்மையில் கட்சிக்குள் இருக்கின்ற ஏழு அல்லது ஐந்து எம்.பிக்களையே திருப்திப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. அதன்படி, ஒருவேளை மஹிந்த ஆட்சியமைத்தால், ஒவ்வொரு முஸ்லிம் கட்சியிலிருந்தும் குறைந்தது ஒருவர் அந்தப் பக்கம் போகக் கூடும். அப்படியென்றால், ஜனநாயகம் என்று மக்களுக்கு சொல்லப்பட்ட காரணத்தின் நிலையென்ன?
அதுபோல, இப்போது ரணிலுக்கு ஆதரவளிக்கின்ற இரு கட்சிகளும் அடுத்த தேர்தல் என்று வருகின்ற போது, மஹிந்தவுடன் சேரமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
மறுபக்கத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பிரதியமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைமை, இப்போது ரணிலைக் கடுமையாக விமர்சித்தாலும் இன்னும் பத்து வருடங்களின் பின்னர், நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
ஆகவே, முதலாவதாக முஸ்லிம் கட்சிகள் தமது நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை, நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான கொள்கை அரசியலில், பயணிக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அன்றாடங்காய்ச்சி அரசியலைச் செய்து கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம் கட்சிகள் எதுவும் பெருந்தேசியக் கட்சிகளின் உபகட்சிகள், கிளைக் கட்சிகள் இல்லையென்பது உண்மையாக இருக்குமென்றால், “எமது அரசியல் சமூகத்துக்கானது” என்று சொல்வது நிஜமென்றால், அதைச் செயலில் வெளிப்படுத்த வேண்டும்.
அதாவது, முஸ்லிம் சமூகம் (கவனிக்க: முஸ்லிம் சமூகம்) எந்தப் பெருந்தேசியத் தலைவருக்கும் கடமைப்படவில்லை. மஹிந்தவுடன்தான் அல்லது மைத்திரியுடன்தான் அன்றேல் ரணில் விக்கிரமசிங்கவுடன்தான் பயணிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரல்களும் விதிகளும் கட்சிகளுக்கு இல்லை என்றால், கொள்கை அரசியலில் பயணிப்பதே சாலச் சிறந்தது.
ஒன்றில் நாம், கொள்கை ரீதியான அரசியலில் பயணிக்க வேண்டும். அதாவது, முஸ்லிம்களின் அரசியல் கொள்கை என்னவென்பதை, தலைவர்கள் அதற்குமுன் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இனப் பிரச்சினை,வடக்கு, கிழக்கு இணைப்பு, இனவாதம், முஸ்லிம்களின் சிவில் விவகாரங்கள், உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்களின் கொள்கை எதுவாக இருக்கின்றதோ, அதற்கு அக்குறிப்பிட்ட காலத்தில் ஒத்திசைவாக இருக்கின்ற பெரும்பான்மைக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஆனால், அதையும் மீறி, பல ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம் கட்சிகள் ஒரு பெருந்தேசியத் தலைவருக்கு ஆதரவளிக்குமானால், அது முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதரவாக இருக்க வேண்டும்.
அதன்படி, நமது ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் போது, சமூகத்துக்காக எதையாவது பெற்றுக் கொண்டே, அந்த ஆதரவை அளிக்க வேண்டும். எந்த உருப்படியான வாக்குறுதியும் எழுத்துமூலம், ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் முஸ்லிம்கள், மஹிந்தவாலும் கடும்போக்காளர்களாலும் ‘கொடுங்கண்’ கொண்டு பார்க்கப்படுவதற்கு, முஸ்லிம் கட்சிகள் காரணமாகிவிடக் கூடாது.
ஜனாதிபதி சொல்லியுள்ள, இந்த ஏழு நாள்களுக்கு உள்ளாவது, முஸ்லிம் கட்சிகள், தாம் தீர்மானம் எடுத்திருக்கின்ற முறைமையை மீள்பரிசீலனை செய்யுமாயின் சிறப்பு.
- மொஹமட் பாதுஷா