Top News

அரசியலமைப்பு மீறலுக்கு சவுக்கடி கொடுத்த நீதித்துறை!

இலங்கையின் நீதித்துறை தனது பக்கச்சார்பின்மையையும் தனித்துவத்தையும் மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேர்சீராகவும், காலதாமதம் காட்டாமலும், சுயாதீனமாகவும், உறுதியாகவும் செயற்பட்டமை மூலம் சர்வதேச மட்டத் திலும் இலங்கையின் நீதித்துறை மெச்சப்படத்தக்கதாகவும் கருமமாற்றியிருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைதான்.

‘‘காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும்” என்பார்கள். அதனைப் புரிந்துகொண்டு, வீண் காலதாமதங்கள், இழுபறிகளுக்கு இடமளிக்காமல் இலங்கையின் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் துணிச்சலுடன் செயற்பட்டிருக்கின்றன.

‘‘நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல், நிலைநாட்டப்படுகின்றமை போல காட்டப்படவும் வேண்டும்” என்றும் சொல்லுவார்கள்.

அரசமைப்பை மீறி நாடாளுமன்றைக் கலைக்கும் நட வடிக்கையை முன்னெடுத்த நாட்டின் முதல் பிரஜைக்கே – நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கே அவரின் நடவடிக்கை தொடர்பில் கனகச்சிதமாக சூடுவைத்திருக்கின்றது உயர்நீதிமன்றம்.

ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கை அப்பட்டமான அரசமைப்பு மீறல் என்பதை உயர்நீதிமன்றத்தின் முழு ஆயமுமே ஏழு நீதியரசர்களுமே ஒன்று சேர்ந்து தீர்ப்பளித்தமையானது அத்துமீறும் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, வழிப்படுத்தும் ஒரு சவுக்கடிதான்.

அதேபோலவே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் தகுதி இழந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அதிகாரத்தில் தொடர்வதற்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றமும் இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராகச் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தமையுடன், அது தொடர்பில் இடைக்கால நிவாரணம் எதையும் தர வாய்ப்பே இல்லை என்று கைவிரித்ததன் மூலம் மீளவும் உயர்நீதி மன்றமும் துணிச்சலுடன் நீதியை நிலைநாட்டியிருக்கின்றன என்றே கூற வேண்டும்.

நீதிமன்றங்களின் இந்த அசைக்க முடியாத நீதியை நிலைநாட்டுகின்ற உறுதிப்பாடே இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவையும் தமது பிரதமர் பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு பதவி விலகும் முடிவுக்குத் தள்ளியிருக்கின்றது என்று கருதலாம்.

தற்போதைய கொழும்பு அரசியல் நெருக்கடி தொடர்பான விடயங்களில் ஹல்ஸ்டோர்ப்பில் உள்ள கொழும்பு நீதிமன்றங்களின் செயற்பாடுகள் மெச்சப்பட்டாலும் கூட, தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நீதிமன்றங்கள் தொடர்பில் பின்னடிப்பான எண்ணப்பாடு இன்னமும் நீடிக்கவே செய் கின்றது.

இதையே, வழமையாகவே வெளிப்படையாகப் பேசும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூலும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

‘‘இன அடிப்படையில் அணுகப்படாத வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை சரியான தீர்ப்பை வழங்கி வருகின்றது’’ என்று அப்பட்டமாகவே சுட்டிக்காட்டுகின்றார் அவர்.

‘‘இலங்கையில் இனவாதம் சகல தரப்புகளிலும் பெரிய அளவில் நிரம்பியுள்ளது. இந்த வழக்கில் சகல சமூகங்களினதும் இனங்களிலும் உரிமைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே, இந்தத் தீர்ப்பில் – இந்த வழக்குகளில் இனவாதக் கருத்துகள் எடுபடவில்லை. இதுவே நீதியான தீர்ப்புக்குக் காரணம்’’ என்று சுட்டிக்காட்டும் ஜீவன் கூல், மற்றொரு முக்கிய அம்சத்தையும் போட்டு உடைத்திருக்கின்றார்.

இப்படி, தென்னிலங்கை அரசியல் விவகாரத்தில் துணிச்சலாகவும், நீதியாகவும், பக்கம் சாராமலும் செயற்படும் தகைமை பெற்ற இலங்கையின் நீதித்துறை, தமிழருக்கு எதிரான இன அழிப்பு விடயத்தில் நீதி செய்யும் என எதிர்பார்ப்பது சந்தேகத்துக்கு உரியதே என்ற சாரப்பட கருத்துப் பிரதிபலிக்கின்றார் அவர்.

‘‘இன அடிப்படையில் அணுகப்படாத வழக்குகளைப் பொறுத்தமட்டில் இலங்கையின் நீதித்துறை நிச்சயமாக பலமாகவும், நீதியாகவும் உள்ளது’’ என்ற அவரது கருத்து இலங்கையின் நீதித்துறையின் உண்மையான கோலத்தை முகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கையில் உண்மையாகப் பேரவலங்களையும், பேரழிவுகளையும், போரழிவுகளையும் மோசமாக எதிர்கொண்டு நிற்கும் சகோதர இனத்துக்கு நீதி செய்யும் தகைமை பெறாத இலங்கையின் நீதித்துறை, தென்னிலங்கை அரசியல் விடயங்களில் துணிச்சலுடன் செயலாற்றுகின்றமையை பாதிக்கப்பட்ட தமிழினம் சிலாகித்துப் பேச முடியாது என்பதுதான் உண்மை நிலையாகும்.
Previous Post Next Post