மஹிந்த ராஜபக் ஷவை பாராளுமன்றத்திலிருந்து நீக்க சுமந்திரன், ஹக்கீம் முயற்சிக்கின்றனர். இவர்களின் இனவாத நடவடிக்கை நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட அனைவரும் தொடர்ந்தும் அந்தக் கூட்டணில் இருக்கின்றனர். எவரும் அதிலிருந்து விலக்கப்படவோ நீக்கப்படவோ இல்லை. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரும் இன்னும் கட்சி அங்கத்துவ கட்டணமான 3ஆயிரம் ரூபாவை செலுத்தி வருகின்றனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றதாக தெரிவித்து மஹிந்த ராஜபக் ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகவிருப்பதால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. அவர்களுடன் ரவூப் ஹக்கீமும் இது தொடர்பில் வாதிட்டு வருகின்றார். மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பியும். அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இனவாதக் கோணத்திலே பார்க்கின்றனர்.
அத்துடன் இவர்கள் மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்துக்கு தகுதியற்றவர்போல் சித்திரித்து அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவே முயற்சித்து வருகின்றனர். மஹிந்த ராஜபக் ஷ 2009ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததே அவருடன் இந்தளவு இவர்கள் வைராக்கியத்துடன் இருக்கின்றனர்.
இவர்களின் இந்த நடவடிக்கையானது நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாரியதொரு தடையாக அமையும். ஏனெனில் நாட்டிலிருந்த பயங்கரவாத யுத்தத்தை ஒழித்து மூவின மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை மஹிந்த ராஜபக் ஷவே ஏற்படுத்தினார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த எவரும் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெறவில்லை. மாறாக அங்கத்துவம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தையே பெற்றுக் கொண்டுள்ளனர். அதனையே ஊடகங்களில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக் கப்பட்டிருக்கின்றன என்றார்.