Top News

நாட்டில் அமைச்சுகளுக்கு செயலாளர்கள் இருக்கின்றார்களா?

பிரதமர், அமைச்சர்கள் இல்லாத சூழ்நிலையில் அமைச்சின் செயலாளர்கள் முழுமையாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செயலாளர்கள் செயற்படமுதல் அமைச்சுகளுக்கு செயலாளர்கள் இருக்கின்றார்களா? என்பதில் தெளிவுவேண்டும்.
அரசியலமைப்பின் சரத்து 52(3) இன் பிரகாரம் அமைச்சரவை கலைகின்றபோது அமைச்சுச் செயலாளர்களும் பதவியிழந்துவிடுவார்கள்.
கடந்த 14ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதோடு அமைச்சரவை கலைந்துவிட்டது; தற்போது பிரதமரோ, அமைச்சர்களோ இல்லை. எல்லோரும் பா உ களே! என்று சபாநாயகர் 15/11/2018 இல் பாராளுமன்றில் அறிவித்தார்.
அப்பொழுது அமைச்சரவை கலைந்தால் அந்த நிமிடமே செயலாளர்களும் பதவி இழந்துவிடுவார்கள். ஆனால் மஹிந்த தரப்பினர் தாமே தொடர்ந்தும் அரசாங்கம் என அடம்புடித்தனர். செயலாளர்களும் தொடர்ந்தனர். அதன்பொருள் செயலாளர்களும் அவர்களை அரசாங்கமாக ஏற்றுக்கொண்டார்கள்; என்பதாகும்.
தற்போது நீதிமன்ற இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து அரசாங்கம் இல்லை. எனவே அதன்பொருள் செயலாளர்களும் இல்லையென்பதாகும்.
நீதிமன்றின் இறுதித்தீர்ப்பு கடந்த 14ம் திகதியிலிருந்து மஹிந்த தரப்பினர் சட்டவிரோதமான அரசாங்கமாகவே செயற்பட்டனர்; என்று வந்தால் செயலாளர்களும் சட்டவிரோதமாக செயற்பட்டதாக பொருள்படும். அந்தக்காலப்பகுதியில் அவர்கள் செலவழித்த பணம், செயற்பாடுகள் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதனால் அவர்களுக்கு பல பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.
எது எவ்வாறிருந்தபோதிலும் தற்போது அரசாங்கம் இல்லாத நிலையில் செயலாளர்களும் இருக்கமுடியாது. எனவே எவ்வாறு செயலாளர்கள் செயற்பட ஜனாதிபதி உத்தரவு வழங்குவது? எவ்வாறு செயலாளர்கள் செயற்படுவது?
“ அமைச்சரவை கலைந்தால்தான் செயலாளர்கள் பதவியிழப்பார்கள். இங்கு அவர்களுக்கு தடையே தவிர நீதிமன்றம் அமைச்சரவையை கலைக்கவில்லை” என்ற ஒரு செயற்கையான வாதத்தை இவர்கள் முன்வைத்தாலும் வைக்கலாம்.
அமைச்சரவை கலைதல் என்பது அமைச்சரவை இல்லாமல் போதல் என்பதாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து அமைச்சரவை கலைந்துவிட்டது. இவர்கள் பிரதமரோ, அமைச்சர்களோ இல்லை; என்பதுதான் வழக்கின் அடிப்படையாகும்.
இவர்கள் இப்போது பிரமரோ அமைச்சர்களோ இல்லை. எனவே அமைச்சரவை இல்லை என்றால் செயலாளர்கள் இருக்கமுடியுமா?
எனவே, மைத்திரியின் தொடர் செயற்பாட்டினால் நாளை செயலாளர்கள் வீண்பிரச்சினைக்குள் மாட்டப்போகிறார்கள்.
தற்போது நாட்டில் பிரதமரும் இல்லை. அமைச்சர்களும் இல்லை. அமைச்சுச் செயலாளர்களும் இல்லை.

- வை எல் எஸ் ஹமீட்
Previous Post Next Post