2016 ஆம் ஆண்டு தெமடகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் நாள் குறித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசாரணை எடுப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினத்தில் சாட்சி வழங்குபவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினங்களில் தெமடகொட பகுதியில் உள்ள கடை ஒன்றில் சேவையாற்றும் அமில பிரியங்கர என்ற இளைஞரை கடத்திச் சென்று சிறைவைத்து துன்புறுத்தியதாக ஹிருணிகா பிரேமசந்திர மீது சட்ட மா அதிபர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கில் பிரதிவாதிகாளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மேலும் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.