இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.
இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! என குறிப்பிட்டார்.
ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலமாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். யூதர்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப்போவதாக நேரடியாகவே மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இவை எல்லாம் பேஸ்புக் போலீஸ் கண்களில் படவில்லை.
கருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார்.