Top News

ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை ஜனாதிபதியை கட்டுப்படுத்துமா?

அடுத்த வாரம் திரு ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வருகிறது. இது வரலாற்றில் முதல் தடவை என்று கூறப்படுகிறது. அது உண்மையே. இதற்குக் காரணம் வரலாற்றிலே இப்படியொரு ஜனாதிபதி வரவில்லை என்பதாகும்.

மஹிந்த ராஜபக்சவை பெரும்பான்மை இல்லாமல்தான் அரசியலமைப்பு சட்டத்தைமீறி நியமித்தேன். பெரும்பான்மைக்காக எம் பி க்களை வாங்க சந்தைக்கு சென்றபோது அவர்களுக்கு 500மில்லியன்வரை விலைகூடிவிட்டது. அதனால் வாங்க முடியவில்லை; அதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை; என்கின்ற மேதகு இருக்கின்ற நாட்டில் இவ்வாறு வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பிரேரணையைக் கொண்டுவர வேண்டித்தான் இருக்கின்றது.

சிலவேளை டொலர் மதிப்பேற்றத்தினால் எம் பி க்களின் விலை கூடியிருக்கலாம். டொலரின் மதிப்பேற்றத்தினால் சந்தையில் சகல பொருட்களின் விலைகளும் ஏறியிருக்கும்போது எம் பி க்களின் விலை ஏறியது ஒன்றும் ஆச்சரியமில்லை. நீங்கள் புதிய பிரதமரை நியமித்தபோது டொலரின் மதிப்பேற்றத்தைக் கருத்தில்கொண்டு எம் பி க்களை வாங்குவதற்கு சரியான பட்ஜெட்டைப் போட்டிருக்க வேண்டும்.

இப்பிரேரணை தொடர்பான சட்ட நிலைப்பாடு என்ன?


பாராளுமன்றத்திற்கு வேண்டிய பிரேரணைகளைக் கொண்டுவந்து நிறுவேற்றுகின்ற அதிகாரம் இருக்கின்றது. ஆனால் அந்தப்பிரேரணை ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட தாக்கத்தை அது வெளியில் செலுத்தும். உதாரணம், அரசின்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை.


சரத்து 48(2) இல் அரசின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே. அப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட கணமே அரசு பதவியிழந்துவிடும். ஆனால் பிரதமராக நியமிப்பதற்கான நம்பிக்கைப் பிரேரணை எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அது நேரடியாக ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தாது.

ஆனாலும் கட்டுப்படுத்தும்.

சரத்து 42(4) ஜனாதிபதி மீது பிரதமரை நியமிப்பதற்கான கடமையைச் சுமத்தியிருக்கிறது. அதற்கான அதிகாரத்தை 33(2)(f) வெளிப்படையாக வழங்குகிறது. அதேநேரம் இந்த நியமனத்தை எந்த அடிப்படையில் செய்யவேண்டும்; என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றது. அதாவது அவ்வாறு நியமனம் செய்யப்படுபவர் “ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய சாத்தியமுள்ளவராக”, இருக்கவேண்டும்.

இதை எவ்வாறு தீர்மானிப்பது? “அவருடைய அபிப்பிராயத்தின் அடிப்படையில்”. அபிப்பிராயத்தை எவ்வாறு எடுப்பது? அது வெளிப்படையாக தெரிகின்ற காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்; தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால்.

இந்தவிடயத்தில் ஜனாதிபதி முதலாவது தவறினார்.

அதன்பின் த தே கூ அமைப்பின் கடிதத்தின்மூலம் பெரும்பான்மை வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டது. அப்பொழுதும் தவறினார். இப்பொழுது பாராளுமன்றம் ‘ இவருக்குத்தான் பெரும்பான்மை இருக்கின்றது’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தால் மறுக்கமுடியுமா?

42(4) இன் கீழ் அவர் உருவாக்கவேண்டிய அபிப்பிராயமே ‘ இவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப்பெற சாத்தியமானவர்’ என்பதாகும். பாராளுமன்றமே சொல்லிவிட்டால் அதன்பின் இவரது அபிப்பிராயத்திற்கு அங்கு என்ன வேலை இருக்கின்றது.

அவருக்கு இருக்கின்ற ஒரேயொரு பணி பாராளுமன்றம் பெரும்பான்மை இருக்கின்றது; என்று சொன்னவரை உடனடியாக நியமித்து தனது கடமையை நிறைவேற்றுவதாகும். தவறின் அரசியலமைப்பு அவர்மீது சுமத்திய கடமையை வேண்டுமென்ற செய்யமறுக்கின்றார்; என்பதாகும்.
Previous Post Next Post