ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நீண்டகாலம் இடம் பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் என்றோர் அமைச்சை உருவாக்கியிருப்பது 1990 களில் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். அவர்களது மீள்குடியேற்றத்திலுள்ள தடைகள் அனைத்தும் துரிதகதியில் நிவர்த்தி செய்யப்படும் என புதிதாக அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத்பதியுதீன் தெரிவித்தார்.
புதிய அமைச்சுப்பதவி தொடர்பில் வினவியபோதே அவர் விடிவெள்ளிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் நீண்டகாலமாக இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்காக நான் முன்பு அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்திருந்தேன். அதற்கிணங்க மீள்குடியேற்றச் செயலணி ஒன்று நிறுவப்பட்டது. அதன் இணைத்தலைவர்களாக நான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா, துமிந்த திசாநாயக்க மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் செயற்பட்டோம்.
தற்போது நீண்டகாலம் இடம் பெயர்ந்தோர்களை மீள்குடியேற்றுவதற்கென புதிய அமைச்சொன்றே உருவாக்கப்பட்டுவிட்டது. இது எமது போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அத்தோடு கூட்டுறவு அபிவிருத்தியும் எனது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சின் மூலம் எவ்வித பேதங்களுமின்றி எனது பணியினை முன்னெடுப்பேன். இதுவரைகாலம் மீள்குடியேறமுடியாத பல்வேறு சோதனை களுக்குட்பட்டிருந்த மக்களது பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
vidi