Top News

அமைச்சின் செயலாளர்கள் மஹிந்தவின் உத்தரவை செயற்படுத்த அவசியம் இல்லை!

சட்டவிரோத அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்சவோ, அவர் சார்ந்த அமைச்சரவையோ விடுத்த அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் செயற்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்சவிற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றை விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,
நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ இல்லை. ஆகவே குறித்த சட்டவிரோத அரசாங்கம் வழங்கிய உத்தரவுகளை செயற்படுத்த வேண்டிய அவசியம் அமைச்சுகளின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், அரச அதிகாரிகள் எவருக்கும் இல்லை. ஆகவே இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அதிகாரிகளை கேட்கின்றோம்.
நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை பெற்றவரே பிரதமராக வரவேண்டும். ஜனாதிபதி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.
அவருக்கு பிடித்தமான ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது. ஐக்கிய தேசிய முன்னணியின் ஒரே தெரிவு ரணில் விக்ரமசிங்கவே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதுவே மாற்றுவழி. இதனைத் தவிர வேறு வழியில்லை.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியுமா? இல்லையா என்பது தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் இரண்டாம் பட்சமே. இதற்கு முன்னரும் ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள், தமக்கு பிடிக்காத நபர்களை பிரதமர் பதவிக்கு நியமித்த வரலாறுகள் காணப்படுகின்றன.
Previous Post Next Post