ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற இரண்டு மீனவர்கள் மூன்று தினங்காளக் காணாமல் போய் தற்போது கரை சேர்ந்துள்ளனர்.
மீனவர்கள், உறவினர்கள் மற்றும் கடற்படையினர் போன்றோர் அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்பில் இவர்களைத் தேடி அலைந்தும் ,சிங்கள சகோதர்களின் உதவியுடனேயே ஹம்பாந்தோட்டை கடற் பிரப்பில் வைத்து இவர்கள் காப்பாற்றப்பட்டு நேற்று இரவு 9 மணியளவில் தமது வசிப்பிடங்களை வந்தடைந்தனர்.
காணாமல் போன இரு மீனவர்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர். நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய முகம்மது சரீப் சஹாப்தீன் என்பவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய ஹனீபா அப்துல் கபூர் என்பவருமே இவ்வாறு காணாமல் போய் மீளவும் கரை சேர்ந்தவர்கள்.
கடந்த மூன்று தினகங்களுக்கு முன்னர் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கென சென்ற இவ்விரு மீனவர்களும் ஒரு இரவுப் பொழுதினை கடலுக்குள் கழித்து மறுநாள் கரை சேர்வது வழங்கமாய் இருந்து வந்தது.
இருந்த போதிலும், இம்மீனவர்கள் வழமைக்கு மாறாக கடந்த மூன்று தினங்களாக கரை சேராமல் இருந்தமையால் அச்சமடைந்த உறவினர்கள் இவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் முயற்சிகள் கைகூடவில்லை.
இவர்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டு மறுநாள் கரைசேர எத்தனித்தபோது அவர்கள் சென்ற சிறிய ரக இயந்திரப் படகின் இயந்திரம் கோளாறு காரணமாக இயங்க மறுத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் காலநிலை மாற்றமடைந்து பலத்த மழை பெய்துள்ளதுடன், பலத்த காற்றும் வீசியதுடன், பனி மூட்டம் நிறைந்து கடற்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்பட்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நங்கூரமிட்டிருந்த அவர்களின் படகு காற்றில் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
இந்நிலைமையினை உறவினர்களுக்கு தெரிவிக்க முயன்றும் தொடர்பாடல் செயலிழந்தமையால் செய்வதறியாது திகைத்து காற்று கொண்டு செல்லும் திசையெல்லாம் இவர்கள் பயணித்திருக்கின்றார்கள். மூன்று தினங்களாக உணவின்றி, உடலில் பலமின்றி இருள் சூழ்ந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சிங்கள சகோதரர்கள் இவர்களைக் கண்டு காப்பாற்றி உணவளித்து இவர்களை கொண்டு சென்று பொத்துவில் பிரதேசத்தில் கரை சேர்த்துள்ளனர்.
பொத்துவில் பிரதேசத்தில் கரைசேர்க்கப்பட்ட இவர்கள் நேற்றிரவு ஒன்பது மணியளவில் வசிப்பிடத்தினை வந்தடைந்தனர். இவ்வாறு உயிர்தப்பிய இவ்விரு மீனவர்களும் தாம் இத்தோடு மரணித்து விட்டோம் என்றே உணர்ந்ததாக குறிப்பிட்டனர்.