Top News

கடந்த சில தினங்களாக தான் மிகுந்த பொறுப்புடனும் , பொறுமையுடனும் செயலாற்றி வருகிறேன் !

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், வலுவான ஜனநாயக முறைமையுள்ள நாட்டில் அவ்வாறு இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த ஜனாதிபதி, வெகுவிரைவில் இந்த நிலைமை மாற்றமடைந்து பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை இன்றி செயற்படும் நாட்டில் ஜனாதிபதி என்ற வகையில் கடந்த சில தினங்களாக தான் மிகுந்த பொறுப்புடனும் பொறுமையுடனும் செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை அரசியல் கட்சிகளுக்கிடையிலான பிரச்சினையாகவும் தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான பிரச்சினையாகவும் விவரிக்க பலரும் முயற்சித்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த பிரச்சினை சுதேச சிந்தனைக்கும் வெளிநாட்டு சிந்தனைக்குமிடையிலான மோதல் ஆகும் எனத் தெரிவித்ததோடு, அந்நிய தேச சக்திகளுக்கு கீழ்படியாமல் சுயமாக எழுச்சி பெற முயலும்போது அந்நிய தேச சக்திகள் அதற்கு சவாலாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களும் நாட்டின் நன்மை கருதி சரியான முடிவுகளை எடுப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார அபிவிருத்திக்கான கருவிகளை வழங்குவதற்காக பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

294 மில்லியன் ரூபா செலவில் 4500 பயனாளிகளுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் இந்நிகழ்வு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post