Top News

முடிவை நெருங்கும் ஆட்டம். !

ஒக்டோபர் 26 இற்கு பிறகு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல.
அவை ஜனவரி 08, 2015 இல் இனியொருமுறை ஜனாதிபதியாக ஆசைப்படமாட்டேன் என்று உல்டா விட்ட ஒரு பழைய விதானையின் மீண்டும் ஜனாதிபதி கதிரையின் மீது ஏற்பட்ட மோகத்தினால் விளைந்த சதி.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்தால் மஹிந்த ஆறடி ஆழத்தில் தன்னையும் குடும்பத்தையும் குழி தோண்டி புதைத்து விடுவார் என்று மேடைகள் தோறும் தொண்டை கிழிய கத்தி திரிந்த சிரிசேன இப்போது சொல்கிறார் அது வெறும் தேர்தல் காலத்து கப்சாவாம் ( Gallery talk).
அது போலதான் நாமல் குமார என்கிற பொலிஸ் ஒத்தூதி ஒருவனை அண்மையில் வெளிக்கிளம்ப வைத்து தன்னை ரணில் விக்ரமசிங்க கொல்வதற்கு சதி செய்கிறார் என்றதொரு புரளியையும் கிளப்பி விட்டார். இடையில் ரோவின் மீதும் வாயை வைத்து பின் பக்கத்தை புண்ணாக்கி கொண்டு மோடியிடம் மண்டியிட்ட படலமும் நடந்தேறியது. உண்மையில் இந்த கொலைச்சதிக்கதையும் இன்னும் சில வருடங்களில் வெறும் கப்சாக்களாக ( Gallery talk) மாறவும் வாய்ப்புண்டு.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டபாய ராஜபக்‌ஷ கடுமையான home work பண்ணி வருகிறார்.

இந்த home work கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடே தொடங்கி விட்டது. மஹிந்த இன்னொரு முறை போட்டியிட முடியாது என்பது உறுதியான நாள் முதல் கோட்டா ஜனாதிபதி கதிரை மீதான காதலை வளர்க்கத்தொடங்கி விட்டார்.
ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள பெளத்த விகாரைகளில் தனது ஜனாதிபதி கனவுக்கான அடித்தளங்களை கோட்டா தொடங்கினார்.

இந்த நகர்வுகள் உண்மையில் மஹிந்தவிற்கு உள்ளார்ந்த விருப்பத்தை வழங்கவில்லை.‘ எலிய’ ( வெளிச்சம்) என்ற அமைப்பினூடாக ஜனாதிபதி கனவிற்கான பல கூட்டங்களை, ஐந்து நட்சத்திர மாநாடுகளை கோட்டா நடாத்தும் போதெல்லாம் ஒப்புக்குச்சப்பாணி போல மஹிந்த முன்வரிசைகளில் குந்திக்கொண்டிருந்தார்.


மஹிந்த நம்புவதெல்லாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஒரு வலுக்கட்டாய பாராளுமன்ற தேர்தலை கொண்டு வந்து அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தனக்கு ஜனாதிபதி தேர்தல் கேட்க முடியாமல் இருக்கும் தடையினை தகர்ப்பதே ஆகும். இதற்கிடையில் கோட்டாவை மிக வெளிப்படையாக பகைத்துக்கொள்ளவும் முடியாமல் மெல்லவும் முடியாத துப்பவும் முடியாத ஒரு திரிசங்கு நிலையில் மஹிந்த விழி பிதுங்கி கொண்டிருந்த போதுதான், கோட்டாவின் ஜனாதிபதி கனவின் மீது சில தீவிர மஹிந்த விசுவாசிகள் கல்லெறிய தொடங்கினார்கள்.....

குமார் வெல்கம அதில் முக்கியமானவர்.

அவர் மஹிந்தவின் உள்ளார்ந்த ரகசியக்குரலாக ஒலிக்கத்தொடங்கினார்.

இந்த இழுபறி நிலையினை, உள்ளக ஊடலை ஒரு பட்சி வடிவாக முகர்ந்தது! இந்தக்குழப்பத்தின் மீது கூடு கட்ட அது முனைந்தது. அதனால் நடந்ததுதான் இந்த பின்கதவு அரசியல் சதி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் UNP காரர்கள் அமைக்கும் பொது அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உறுதி செய்து கொண்ட பட்சி ஒரு conspiracy theory இனை உருவாக்கியது. அது தன்னை யாரோ கொல்லப்பார்க்கிறார்கள் என்றும் அதன் பின்னணியில் ரணில், பொன்சேக்கா போன்றோர் இருக்கிறார்கள் என்றும் ஒரு புனைவை உருவாக்கியது. அந்த புனைவில் குற்றஞ்சாட்டப்பட்ட DIG நாலக சில்வாவின் கைது நிகழ்ந்து சில தினங்களில் ரணிலை தூக்கி வீசிவிட்டு தனக்கே ஆறடி குழி தோண்டிய மஹிந்தவை அதிரடியாக பிரதமராக அறிவித்தது.

பிறகு எம்பிமாருக்கு கோடிக்கணக்கில் விலை பேசும் பந்தயம் தொடங்கியது. பத்தரமுல்லை சந்தியில் ‘113 இல்லாமல் பிரதமராக மஹிந்த என்ன மடையனா’ என்று சிங்களத்தில் ஒரு முஸல்மான் மந்திரி கூவிய அதே கூட்டத்தில்தான் இந்த பட்சியும் பல கதைகளை அளந்தது. வண்ணத்துப்பூச்சி மொய்த்த கதை அதில் பிரபலமானது. அத்தோடு ‘113 ஹதல இவரய்’ ( 113 செய்து முடித்தாயிற்று) என்றும் பட்சி கீச்சிட்டது. அது பச்சப்பொய்.

மஹிந்தவுடம் அப்பம் திண்ட கையோடு மறுநாள் காலையில் பெல்டி அடித்த பாவத்தை கழுவி தன்னை பரிசுத்தமானவனாக நிறுவ பட்சி எடுத்த முடிவுதான் இந்த பின்கதவு பிரதமர் நியமனம்.

இதனால் மஹிந்தவிற்கு பாராளுமன்றத்தில் ‘முடிந்தால் 150 பேரின் ஆதரவை திரட்டி யாப்பை மாற்றிக்கொள்’ என்று சொல்வது போல ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

அந்த மனிசன் பாவம் 100 பேரை திரட்டவே படாத பாடுபட்டு தோற்றுப்போகவே பட்சி பாராளுமன்றத்தையே கலைத்தது.

பட்சிக்கு தெரியும் யாப்பின் படி அது விரோதம் என்று, ஆனாலும் அதன் இலக்கு ஜனாதிபதி தேர்தல்தானே! மஹிந்த பட்சியின் விசுவாசத்தை கண்டு கோட்டாவின் தலையிடியை தவிர்க்க தன்னை வேட்பாளராக நிறுத்துவாரென பட்சி நம்பியது.

பத்தரமுல்ல சந்தி கூட்டத்தில் மஹிந்த இப்படி சொன்னார் “முன்னரும் நான் அதிகம் பேசுவதில்லை, எங்களது லேகம்துமாதான் (செயலாளர்) அதிகம் பேசுவார், இங்கேயும் அவரே பேசட்டும்” என்று பட்சிக்கு இடம் கொடுத்து விட்டு மஹிந்த அமர்ந்து விட்டார். பட்சி அதே பழைய பவ்வியத்தோடு எழுந்து கீச்சிட்டது. தனது பழைய முதலாளியை திருப்திப்படுத்த பல இடங்களில் சிரிப்புக்காட்டியது. தான் மீண்டும் ஜனாதிபதியானாலும் ‘தங்களது அடிமைதான் எசமான்’ என்பதை பல முறை தனது கீச்சுகளில் சொல்லியது.

ஆனால் பட்சி எதிர்பார்த்தது போல் முஸ்லிம் கட்சிக்காரர்கள் அதன் பக்கம் தாவவில்லை. JVP அங்குசத்தை எடுத்து சுழற்றியது, TNA ஜனநாயகத்தின் கேடயமாக நின்றது.

அதனால் பட்சி பாராளுமன்றத்தை கொத்திக்கலைத்தது.


மீண்டும் வென்று மூன்றில் ரெண்டை பெற்று முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் நீங்களே போட்டியிட்டுக்கொள்ளுங்கள் எசமானே என்பது போல் பாராளுமன்றத்தையும் கலைத்து கொடுத்தது.

பாராளுமன்ற தேர்தல் நடந்தாலும் மஹிந்தவிற்கு மூன்றில் இரண்டெல்லாம் கிடைக்காதென்று பட்சிக்கு தெரியும்.

அது தனது இலக்கில் கவனமாகவே இருக்கிறது!

இருந்த அரசை கலைத்துக்கொடுத்து எலக்சன் நடத்தி மஹிந்த ராசாவை பிரதமர் ஆசனத்திலாவது அமரவைத்தால் தனது பாவமன்னிப்பை ஏற்று தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து விடுவார் என்று பட்சி நம்பியது.


மஹிந்தவிற்கு தனது தம்பியை ஜனாதிபதியாக்கி அவருக்கு கீழே பிரமராக இருப்பதென்பது எவ்வளவு சங்கடமானது என்று நமக்கே விளங்குகிறது, பட்சிக்கு விளங்காமலா போகும்.


அந்த சங்கடத்தை தனக்கு மூலதனமாக்கவே முயன்றது இந்த பாவங்களை சுமந்த பட்சி. ஆனால் இரண்டு இடங்களில் நீதித்துறை என்கிற வாழை மரத்திற்குள் பட்சியின் சொண்டு வசமாக மாட்டிக்கொண்டது.....

தனது கனவுகள் கலைந்து போவதையும், தன்னை பைத்தியம் பிடித்த பறவையென்று சுற்றம் தூற்றுவதையும் கண்டு, கண்கலங்கும் பட்சி தன் சொண்டை மீட்க முடியாத துயரத்தில் போராடி வருகிறது.....

அனேகமாக திங்கட்கிழமை ( 10.12.2018) அது சொண்டறுந்த பட்சியாக கீழே வீழக்கூடும்.

-முஜீப் இப்ராஹீம்-
Previous Post Next Post