அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.ஜெவ்பர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது ராஜினாமா கடித்தை கையளித்துள்ளார்.
பிரதி தவிசாளர் ஜெவ்பர் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலப்பையின் சகோதரரர் ஆவார்.
ஜெவ்பர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அதாவுல்லா காங்கிரஸ் அணியில் போட்டியிட்டு ஹக்கீம் காங்கிரஸ் அணியிடம் போட்டியிட்ட வேட்பாளரிடம் தோல்வி கண்டவர். ஆனாலும் அதாவுல்லா காங்கிரஸ் அணிக்கு கிடைத்த போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினராக நியமனம் பெற்றவர். கடந்த மாதங்களாக உதுமாலப்பைக்கும் அதாவுல்லாக்குமிடையில் ஒரு பனிப்போர் நடந்து வருகின்றது.
அந்த பனிப்போரின் உச்ச கட்டம் இந்தப் பதவி பறிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.
அட்டாளைச்சேனை பிரதேசசபை ஆட்சியை எடுத்துக் கொண்டால் 18 உறுப்பினர்கள் கொண்ட சபைக்கு ஹக்கீம் காங்கிரஸ் அணி 7, அதாவுல்லா காங்கிரஸ் 6, ரிசாத் காங்கிரஸ் 3, ஐ.தே.க 1, மஹிந்தரின் மொட்டு 1 ஆகிய ஆசனங்கள் பெற்றிருந்தார்கள். அட்சி அமைப்பதற்கு குறைந்தது 9 ஆசனங்கள் வேண்டும்.
அந்த அடிப்படையில் தற்போதைய ஆட்சி என்பது ஹக்கீம் காங்கிரஸ் அணி கொண்ட 7 உறுப்பினர்களும், ஐ.தே.க 1 உறுப்பினரும், மஹிந்தரின் மொட்டு உறுப்பினர் 1 ஆகிய 9 ஆசனங்கள் கொண்ட ஆட்சி நடைபெற்று வருகின்றன.
ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சியை அதாவுல்லாஹ் நினைத்தால் மிகவும் சிம்பலாக கைப்பற்றி இருக்கலாம். அதாவது அதாவுல்லாவின் 6 ஆசனங்களும், ரிசாத் அணியின் 3 ஆசனங்களும் இணைந்து 9 ஆசனங்கள் கொண்ட ஆட்சியை அமைத்திருக்கலாம்.
ஆனால் அதாவுல்லாஹ் அதை விரும்பவில்லை. காரணம் அம்பாறையில் ரிசாத் கால் பதிப்பதை அதாவுல்லாஹ் ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் அதாவுல்லாவின் இந்த சின்னத்தனம் குறுநிலமன்னர் நினைப்பு எண்ணம் அதாவுல்லாவின் அரசியலுக்கு ஆப்பாக அமைந்து விட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை அதாவுல்லா அமைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம் நாங்கள் முழு ஆதரவு தருகின்றோம் என்று அமைச்சர் ரிசாத் முயன்ற வரை முயன்று பார்த்தார் .
அதாவுல்லாஹ் அதை தட்டிக் கழித்து எட்டி உதைத்து விட்டார். ஆனால் அதாவுல்லாவின் இந்த முடிவை இந்த தலைக் கணத்தை ஒரு போதும் உதுமாலப்பை விரும்பவில்லை.
ரிசாத் அணியுடன் இணைந்து சபையைக் கைப்பற்றுவோம் என்று உதுமாலப்பை விரும்பினார். அதாவுல்லா விரும்பவில்லை. இந்த மோதலே அதாவுல்லாவுக்கும் உதுமாலப்பைக்கும் ஒரு விரிசலை இடைவெளியை ஏற்படுத்தியது.
அந்த பனிப்போர் இருவரும் வெவ்வேறு துருவம் என்ற நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. பிரதி தவிசாளர் ஜவ்பர் ஏற்கனவே திகதி இடப்படாமல் ராஜினாமா கடிதம் ஒன்றை அதாவுல்லாஹ்விடம் கொடுத்துள்ளதால் அந்தக் கடிதத்தில் திகதி இட்டு எனது ராஜினாமா கடிதத்தை நீங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதி தவிசாளர் ஜவ்பர் அதாவுல்லாஹ்விடம் தெரிவித்து விட்டாராம்.
இது குறித்து ஜவ்பரை தொடர்பு கொண்ட போது அவர் தொடர்புக்கு வரவில்லை. ஜவ்பரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதில் எப்போதும் சிக்கலே, அவர் தொலைபேசிக்கு பதில் அளிப்பதில்லை.
இது குறித்து முன்னாள் அமைச்சர் உதுமாலப்பையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அதாவுல்லாஹ் கட்சித்தலைவர் பிரதி தவிசாளர் பதவி என்பது அவர் கட்சி ஊடாக வழங்கப்பட்டது கொடுத்ததை மீளக் கேட்டா. கொடுத்து விட்டார். அவ்வளவுதான் என்றார்.
ஆனால் இப்போது உதுமாலப்பை சுதந்திரமாக அதாவுல்லாவின் எந்தவொரு பதவியும் இன்றி அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு துரோகம் செய்யாமல் அவர் கட்சியை காட்டிக் கொடுக்காமல் எந்தக் கட்சிக்குள்ளும் சங்கமிக்கலாம்.
உதுமாலப்பைக்கு இருந்த ஒரே ஒரு தர்மசங்கடம் அவர் தம்பி ஜவ்பர். பிரதி தவிசாளர் பதவி அந்தப் பதவியை தானாக அதாவுல்லா மீளப் பெற்றுக்கொண்டார். அதனால் இப்போது அதாவுல்லாஹ் அணியின் எந்தவொரு வசை வம்புக்கும் ஆளாக வேண்டிய தேவை இருக்காது.
நாட்டில் விரைவில் நடக்கவுள்ள பொது தேர்தல் அல்லது மாகாண தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் உதுமாலப்பை, அமைச்சர் ரிசாத் அணி கொண்ட மயிலில் போட்டியிடும் நிலையொன்று காணப்படுகின்றது.
இதை நாம் எமது செய்தி தேடலில் அறிந்தவை. உதுமாலப்பை, அதாவுல்லாவோடு முரண்பட்டதும் ரிசாத் அணி உதுமாலப்பையை அரவணைத்துக் கொண்டது. பலசுற்றுப் பேச்சுவர்த்தைகள் மூலமாக உதுமாலப்பை ரிசாத் அணியோடு சங்கமித்து விட்டார்.
இப்போது ஒன்றும் அவசரம் இல்லை. தேர்தல் ஒன்று வரும்போது உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளலாம் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்று வரும்போது அட்டாளைச்சேனையில் அமைச்சர் ரிசாத்துக்கு ஒரு விழா வைத்து அந்த மேடையில் உத்தியோகபூர்வமாக உதுமாலப்பையுடன் அவரது ஆதரவாளர்கள் இணைந்து கொள்ளவுள்ளார்கள். இதை இல்லை என்று உதுமாலப்பை மறுப்பு தெரிவிப்பாரா?
அதாவுல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடும் ரிசாத் அணிக்கு நல்ல சாதகமாவே அமைந்து விடுகின்றது. அம்பாறையில் ரிசாத் காங்கிரஸ் என்பது தவிர்க்க முடியாத அணி.
இந்த அணி என்பது ஹக்கீம் காங்கிரஸ் அணிக்கு சவாலான அணி. அம்பாறையில் அரசியல் மோதல் என்பது ஹக்கீம் காங்கிரஸ்க்கும் ரிசாத் அணிக் கொண்ட மயிலுக்குமான மோதல்
இந்த மோதலில் அதாவுல்லாஹ் இல்லை. அதாவுல்லாஹ் ஹக்கீம் காங்கிரஸ் அல்லது ரிசாத் காங்கிரஸ் அணியில் இருந்து ஏதாவது ஒரு அணியில் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே அவர் வெற்றி பெற முடியும்.
அதை விட்டு மொட்டில் அல்லது சுதந்திரக்கட்சியில் அதாவுல்லாஹ் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவுல்லாஹ் தனது கட்சியை கிழக்கில் வழர்க்க தவறி விட்டார்.
கிழக்கில் ஹக்கீம் காங்கிரஸ் அணிக்கு எதிரான கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை தேவை என்ற நிலை கடந்த 10 வருடமாக இருந்து வருகின்றது. அந்த தேவையை அறிய அதாவுல்லாஹ் தவறி விட்டார்.
அது குறித்தான அறியும் தன்மைக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்தே காணப்பட்டது. அதாவுல்லாஹ் அதிகாரத்தில் இருந்த போது அவர் மக்களோடு இருக்கவில்லை மக்கள் நெருக்கத்தை தவிர்த்து வந்தார்.
ஹக்கீமை எதிர்த்து கிழக்கில் இருந்து ஹக்கீமை துரத்தும் மிக நல்ல வாய்ப்பு அதாவுல்லாஹ் கையில் இருந்தது. ஆனால் அதாவுல்லாஹ் தனக்கு தானே ஒரு இரும்பு வேலி அமைத்து அதற்குள் ஒதுங்கி கொண்டார்.
அவரை சுற்றி ஒரு கூட்டம் இன்னும் அதே வெளியை அமைத்துக் கொண்டு மக்கள் சந்திப்பை தவிர்ப்பதும் ஊடகர்களை நெருங்குவதை தவிர்த்தும் வருகின்றார்கள். குறைகள் நிறைகள் சொல்லக்கூடிய நெருக்கத்தை இன்னும் அதாவுல்லாஹ் கொண்டிருக்கவில்லை.
அதாவுல்லாஹ் தனியாக நின்று வெற்றி பெற முடியாத நிலை. இப்போது ஹக்கீமை கிழக்கை விட்டு துரத்தும் கடிவாளம் வாய்ப்பு ரிசாத்திடம் வந்துள்ளது. கிழக்கில் கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை என்ற கடை அமைச்சர் ரிசாத்திடம் கிடைத்துள்ளது.
அவர் நன்றாக வாய்ப்பை பயன்படுத்தினால் எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் ஹக்கீம் காங்கிரசை விட 2 - 3 எம்பிக்கள் அதிகமாக ரிசாத் பெறுவார். அதன்மூலம் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி ரிசாத் என்ற நிலை உருவாகும்.
இந்தியாவை சுற்றி சீனா வளைத்துள்ளது போன்று கிழக்கை ரிசாத் தனது பிடிக்குள் கொண்டு வருவார். நாட்டில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் இதற்கான விடையினை கொடுக்கும்.
M.M.Nilamdeen