கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் குருநாகல், -பொத்துஹர பகுதியில் இந்துக் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய விவகாரத்திலும் இதுவரை கைதாகியுள்ள ஏழு சந்தேக நபர்களும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்துள்ளமையை பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
அதனால் இவர்கள் சிலை உடைப்பு விவகாரங்களில் திட்டமிட்ட குழுவாக செயற்பட்டிருக்க வேண்டுமெனப் பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில், அக்குழுவுக்குத் தலைமை வகித்ததாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரபப்டுத்தியுள்ளனர்.
கண்டி, கேகாலை அதிரடிப் படையினர் மற்றும் உளவுத் துறையினரின் பங்களிப்போடும் சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணையாளர்களின் ஆலோசனையின் கீழும் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே இந்த சிலைகளை உடைக்க சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சுத்தியலொன்றை பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து இது மீட்கப்பட்டதாக அறிய முடிகின்றது. கைதாகியுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் மாவனெல்லை, தெல்கஹகொட மற்றும் அதனை அண்மித்த ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறினர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனக் கூறும் பொலிஸார் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்பிலான தொழில்களில் இவர்கள் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் சிலை உடைப்பின் பின்னணி மற்றும் நோக்கம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த தொடர் விசாரணைகளை மாவனெல்லை பொலிஸாரும் கேகாலை குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த வருடம் டிசம்பர் மாத நடுப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவில் பாதையோர புத்தர் சிலைகள் இரண்டு தாக்குதலுக்குள்ளாகியிருந்தன. இது தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், 2018 டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை 3.00 மனியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அண்டிய பகுதியிலிருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே திகதியில் அதிகாலை 4.00 மணியளவில் மாவனெல்லை -திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னரேயே இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏனையோரை பொலிசார் கைது செய்தனர். இதனைவிட அதே திகதியில் யட்டிநுவர ஸ்ரீ தொடங்வல நாக விகாரை வளாகத்திலுள்ள புத்தர் சிலையொன்றும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. அச்சம்பவம் தொடர்பில் ஸ்தலத்துக்கு சென்றுள்ள கண்டி மற்றும் பேராதனை பொலிஸார், தாக்கப்பட்ட புத்தர் சிலையை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன் விகாரையின் சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமெரா பதிவுகளையும் பெற்று விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனைவிட இதனை அண்மித்த தினத்தில் குருநாகல் – பொத்துஹர பகுதியில் உருவச்சிலைகள் சில சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் சில சான்றுகளுக்கமைய வெலம்பொட, மாவனெல்லை மற்றும் பொத்துஹர சம்பவங்களுடன் ஒரே குழுவே தொடர்புபட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். அதன்படியே மாவனெல்லை விவகாரத்தில் கைதான 7 பேரையும் பொத்துஹர சம்பவத்துக்கு பொல்கஹவல நீதிமன்றிலும், வெலம்பொட சம்பவத்துக்கு கம்பளை நீதிமன்றிலும் ஆஜர்செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.