ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையானது சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் சுதந்திரக் கல்வியின் பலனாகும். குறைந்த வருமானமுடைய குடும்பங்களில் திறமை வாய்ந்த பிள்ளைகளுக்கு தொடர்ந்து கல்வி கற்க அரசாங்கம் நிதி உதவியை பெற்றுக் கொடுப்பதே இந்தப் பரீட்சையின் ஒரு நோக்கமாகும்.
மற்றைய நோக்கம் மத்திய மகாவித்தியலயங்களில் கல்வி கற்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இன்று அவை பிரபல பாடசாலைகளாக மாறியுள்ளன. கன்னங்கரவின் சுதந்திர கல்விச் சட்டத்தின் பலனான இந்தக் கொள்கை மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதோடு இன்றுவரை அந்தப் பரீட்சை நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஆனால் தற்போது அந்த நோக்கங்களையும் கடந்து தரம்_1 புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது. மொத்த சிறுவர்களையும் இப்பரீட்சை இந்தப் போட்டியில் ஈடுபடுத்தியுள்ளதுடன் கிராமப்புற பெற்றோர்களை விட நகர்ப்புறப் பெற்றோர்களே தமது பிள்ளைகளை பரீட்சையில் தோற்றுவதற்கு அதிகம் ஊக்குவிக்கின்றார்கள். புலமைப் பரிசில் பரீட்சை என்பது 'பெற்றோர்களின் பரீட்சை' என்று சமூகத்தில் கூறுமளவிற்கு போட்டி நிறைந்ததாக மாறியுள்ளது.
பிள்ளையொன்று உலகை அறிந்து கொள்வதற்கு முயலும் வேளையிலிருந்து அதாவது முன்பள்ளி வயதிலிருந்து இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்து சில பெற்றோர் முயற்சி செய்கின்றார்கள். வேறொரு வகையில் கூறுவதென்றால் முன்பள்ளிப் பருவத்திலிருந்தே புலமைப்பரிசில் பரீட்சை என்னும் தடையைத் தாண்டத் தயாராகின்றார்கள்.
அதனால் வெட்டுவதற்கு, இழுப்பதற்கு, கிழிப்பதற்கு, மண் பிசைவதற்கு, பாடுவதற்கு, ஆடுவதற்கு, ஆக்கங்களை மேற்கொள்வதற்கு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தில் எழுத்துக்களை எழுதவும், வாசிக்கவும் சில பெற்றோர் பயிற்சி அளிக்கின்றார்கள். பெற்றோர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் சில முன்பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முதலிடம் வழங்குகின்றார்கள். கல்வியிலுள்ள போட்டித்தன்மையே இந்நிலைமையின் பிரதான காரணமாகும்.
'கையாளும்' திறமை அபிவிருத்தி செய்யப்படாமையினால் பிள்ளையொன்று சமநிலையான நபராக வளர்வதற்கான ஆரம்ப சந்தர்ப்பம் தவிர்க்கப்படுகின்றது. அதாவது இந்த நடவடிக்கைகளினூடாக பிள்ளைகளின் மனநலம், சமூக மற்றும் அறிவே வளர்ச்சியடைகின்றன. சமநிலையான ஆளுமையுடன் கூடிய நபரொருவர் உருவாக வேண்டுமென்றால் பிள்ளையின் மனநலம் வயதுக்கேற்றவாறு வளர்ச்சிடைய வேண்டும். அதற்காக ஆரம்ப கால குழந்தைப் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றை மேற்கொள்ளாதவிடத்து கற்பனா சக்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி, விவாதம் புரியும் திறமை, உருவாக்கும் திறமை போன்ற திறமைகள் முன்னேற்றமடையாது என்றே கூறவேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்கையில், ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெற விரும்பும் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் மன, சமூக மற்றும் புத்தி வளர்ச்சி பற்றி எண்ணுவதற்கு நேரமில்லை. சிலவேளைகளில் பெற்றோர் பிள்ளைகளின் வயதுக்கேற்ப மேம்படுத்த வேண்டிய திறமைகளைப் பற்றி அறியாதிருக்கின்றார்கள். இதுபற்றி அறிந்த பெற்றோர் கூட போட்டியான கல்வி நிலைமை காரணமாக அதனை மறந்து செயற்படுகின்றார்கள்.
முன்பள்ளிக் காலத்தின் பின்னர் ஆரம்பப் பாடசாலையிலும் இந்த நிலைமையே தொடர்கின்றது. கல்வி மனநல கல்விப்பீடத்தில் பட்டப்படிப்புக்காக மேற்கொள்ளும் சில ஆய்வுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிலர் ஆறு மணிக்கே பாடசாலைக்கு வருவதாகவும மாலையில் நான்கு மணிக்கே பாடசாலையை விட்டுச் செல்வதாகவும் மீண்டும் மாலையில் ஆறு மணிலிருந்து ஒன்பது மணி வரையும் கற்பதாகவும் தெரியவந்துள்ளது. அநேகமான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நிலைமை இதுவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான கல்வி முறை மாணவர்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை இலங்கை சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டிய காலம் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க சமூகம் சிறுவர் ஆற்றலை சுரண்டுவதைக் கண்ட, கல்வி மற்றும் அரசியல் தத்துவஞானியான ஜின் ஜெக் ரூசோ கூறியது என்னவென்றால் சிறுவர் என்பது சிறிய வயது வந்தவரல்ல என்பதாகும்.
சிறுவர் என்பது சிறுவர்தான் என்பதை அவர் உணர்த்தினார். அந்த எண்ணத்துக்கு மதிப்பளித்து அமெரிக்கா தவறை திருத்தி சிறுவர்களுக்குரிய இடத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது. புகழ் பெற்ற மனநல விஞ்ஞானியான ஜின் பியாஜே நாற்பது வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கூறியது என்னவென்றல் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வயதுகேற்பவே நடைபெறுகின்றது என்பதாகும்.
அவ்வாறாயின் நாம் புலமைப் பரிசில் பரீட்சை மூலம் செய்வது என்னவென்றால் பூக்களின் மீது பாரமான கல்லை வைக்கின்றோம். தற்போது பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையால் சிறுவர்களுக்கு விளையாட, ஓய்வாக இருக்க காலம் கிடைப்பதில்லை. கல்வி மனநல விஞ்ஞானிகள் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கு விளையாட்டு அத்தியாவசியமான விடயம் எனக் கூறுகின்றார்கள். இளைஞர்களாக புத்தியுடன் செய்ற்படுகின்றார்கள் என்றால் அவர்கள் சிறு பராயத்தை மிகவும் மகிழ்ச்சியாக கழித்தவர்கள் ஆவர். சிலவேளைகளில் மெதுவாக மனவளர்ச்சி அடையும் விசேட தேவைகளையுடைய சிறுவர்கள் கூட புலமைப் பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு செல்கின்றார்கள். இது அம்மாணவர்களை மிகவும் பாதிக்கின்றது.
ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு அரை மணித்தியாலம் நாற்பது நிமிட கால வேளைகளில் ஒரு பாடமே கற்பிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு குறிகிய கால ஞாபகத்திறனே காணப்படுகின்றது. சிறுவர்களை ஏணியில் மெதுவாகவே மேலே ஏற பெற்றோர் உதவி செய்ய வேண்டும். ஆனால் பெற்றோர் ஏணியின் மேலே ஏறி பிள்ளைகளை மேலே இழுப்பதால் அனர்த்தமே நிகழ்கின்றது.
உளவியலாளர்கள் சிறுவர்கள் குறித்து பல விடயங்களை பல வருட ஆய்வுகளின் பின்னரே தெரிவித்துள்ளார்கள். நாம் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோமா என்பது கேள்விக்குறியே. சில பிள்ளைகளால் பரீட்சை எழுத முடியாமற் போயுள்ளது. ஒரு மாணவன் பரீட்சைக்கு முன்னர் சுனாமி வந்து தன்னை அடித்துச் சென்றால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளான்.
இன்னொரு மாணவன் 'பறவையாய் இருந்தால் சுதந்திரமாகப் பறந்து சென்றிருப்பேன்' எனக் கூறியுள்ளான். இவையெல்லாம் பரீட்சையானது மாணவர்கள் மீது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனையே சுட்டிக் காட்டுகின்றன.
அதைத் தவிர பிள்ளைகளுக்கு சமூகத்தாருடன் பழகும் சந்தர்ப்பமும் கிடைக்காமற் போகின்றது. பாடசாலை, மேலதிக வகுப்பு என செல்லும் மாணவனுக்கு வீட்டில் தாயாரும் பாடங்களை கற்பிக்கின்றார். அதனால் அவனுக்கு சமூகத்துடன் பழக நேரம் கிடைப்பதில்லை. இதனால் வளர்ந்த பின்னரும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழத் தலைப்படுகின்றான். கல்வியை மட்டும் கற்பதால் முழுமையான மனிதனாகி விட முடியாது. பரீட்சை என்பது மனிதனின் ஒரு தேவையே. இயந்திரம் போன்ற மனிதனை உருவாக்குவதால் உணர்வுபூர்வமான, ஆக்கத்திறன்மிக்க, நல்ல சமூகத் தொடர்புகளை பேணக் கூடிய மனிதன் உருவாகுவது சாத்தியமற்றுப் போகின்றது.
இந்தப் பரீட்சையின் தோற்றத்தை மாற்றுதல், அதிக போட்டித் தன்மையை குறைத்தல் ஆகியன மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க முடியும். புலமைப்பரிசில் பரீட்சையின் நோக்கம் என்னவென்பதை நன்றாகப் புரிந்து கொண்டு அப்பரீட்சைக்கு தமது பிள்ளைகள் தோற்ற வேண்டும் என விரும்பும் பெற்றோர் மாத்திரம் தங்கள் பிள்ளைகளை பரீட்சைக்கு அனுமதிக்கக் கூடிய திருத்தமொன்றை கொண்டு வருவது மிக நல்லது. அதாவது மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயமான பரீட்சையாக அமையக் கூடாது. விருப்பமான பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என எண்ணும் மாணவர்கள் மாத்திரம் பரீட்சைக்குத் தோற்ற வழிஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அனைத்து சிறுவர்களையும் இந்த அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முடியும். அவ்வாறில்லாமல் தொடர்ந்து இந்தப் போட்டிக்கு சிறுவர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டால் அவர்களுடைய அழகான சிறு பராயக் காலத்தை இழக்க நேரிடும்.
அதன் பலனாக அப் பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல முழு சமூகமுமே துன்பப்பட நேரிடும்.
அதனால் பெற்றோர், பெரியோர்,கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சுதந்திரக் கல்வியின் பலனாக ஏற்படுத்தப்பட்ட இந்தப் பரீட்சையை தொடர்ந்து நடத்த வேண்டும். அங்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது பரீட்சையின் நோக்கத்துக்காகும். அவ்வாறில்லாவிட்டால் புலமைப் பரிசில் பரீட்சையை ஆரம்பித்ததன் நோக்கம் அழிந்து போகலாகாது.
கலாநிதி சமுத்ரா செனரத்
கொழும்பு பல்கலைக்கழகம்,
கல்வி உளவியல்
சிரேஷ்ட விரிவுரையாளர்