இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பட்சத்தில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது, தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்கள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றபடுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரப் பிரிவினுடைய தெற்காசியத் திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில், நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.
இதன்போதே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். இந்தச் சந்திப்பில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 2015 ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது மக்கள் வழங்கிய ஆணையைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இணைந்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அண்மையில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சம்பந்தன், சட்டவிரோதமானதும் அரசியல் சாசனத்துக்கு முரணானதுமான செயற்பாடுகளை, தாம் எப்போதும் அனுமதிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த அதேவேளை, தாம் அவ்வாறு செயற்படுகின்ற போது, எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது எனவும், கொள்கையின் அடிப்படையில் தாம் சில முடிவுகளை எடுக்கின்றபோது, ஏனைய விடயங்கள் குறித்துப் பெரிதாகக் கவனஞ்செலுத்த முடியாதெனவும் தெரிவித்தார்.
இதன்போது, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் விளக்கமளித்த கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன், 2016ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, மிக நீண்ட நடைமுறைகளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறிய அதேவேளை, இரண்டு பெருன்பான்மைக் கட்சிகளும், புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து, தமது மக்களுக்கும் கட்சியினருக்கும் தெளிவுபடுத்துவதில் அசமந்தப் போக்கைக் கொண்டுள்ளதாக எடுத்துரைத்தார்.
இதன்போது, அதிகாரப் பரவலாக்கம் என்பது, நேர்மையானதாகவும் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை உபயோகிக்கக் கூடிய வகையிலும் இருத்தல் அவசியமென வலியுறுத்திய கூட்டமைப்பின் தலைவர், அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் காணப்படும் அசமந்தப்போக்கே, இதனை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் உண்மையான பிரச்சினை எனவும் தெரிவித்தார்.
மக்கள் கைகளில் அதிகாரங்கள் செல்கின்றவிடத்து, ஊழல் மற்றும் வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை குறையுமென்பதால், ஒருசில அரசியல்வாதிகள், பொதுமக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அஞ்சுவதாகவும் அவர் எடுத்துக்கூறினார்.
மேலும், இலங்கையின் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் இயன்றளவு ஒத்துழைப்புடன், ஓர் அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதையும் சுட்டிக்காட்டிய சம்பந்தன், தாங்கள், ஒருமித்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டுக்குல்லேயே ஒரு தீர்வை எதிர்பார்ப்பதாகவும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வு கொண்டுவரப்படுகின்ற போது, தாங்கள் அதனை எமது மக்கள் முன் எடுத்துச் செல்லுவதாகவும் கூறியதோடு, எமது மக்கள், அத்தகைய தீர்வுடன் கூடிய ஒரு புதிய அரசமைப்பை அங்கிகரிப்பதற்கான ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உண்டென்றும் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, சர்வதேச சமூகத்தின் வகிபாகம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர், இலங்கை அரசாங்கம், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வது தவிர்க்க முடியாததொன்று என்றும் சர்வதேசச் சமூகம், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
சுமார் ஒரு மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பிரதானி போல் கிறீன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.