"மாகாண சபைத் தேர்தல் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்பட வேண்டும்.புதிய முறைமையில் காணப்படும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஆபத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டு நீக்கப்பட்ட பின்பே தேர்தலுக்கு செல்ல வேண்டும்.'
-இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.கண்டி போதனா வைத்தியசாலையில் கண்டி ட்ரான்ஸ் கல்வ்ப் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் 15 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஓய்வு அறையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். கண்டி முஸ்லிம் நம்பிக்கை நிதியம் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
நாட்டுக்குள் நிலவும் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் காரணமாக மருந்து வகைளுக்கான தட்டுப்பாடு நிலவியது. ஜனாதிபதிகூட சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் பேசி அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற் கொண்டார். எனினும், அரசாங்கம் செயலிழந்து காணப்பட்டமையினால் அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பம் இடுவதில் சிக்கல்கள் இருந்தன.
தற்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன பதவியேற்றவுடன் நாட்டுக்குத் தேவையான சகல மருத்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு மாதத்திற்குள் நிறைவு பெறும்.
மரணத்தின் பின் பிரேதப் பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு முன்னால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி சிரமப்பட்டதால் கண்டி வைத்தியசாலையின் அத்தியட்சகர் மற்றும் மரண சட்ட விசாரணைப் பணிப்பாளர் ஆகியோருடைய வேண்டுகோளின் பிரகாரம் கண்டி ட்ரான்ஸ் கல்வ்ப் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. எம். ரபீக் அவர்களினால் தங்குமிட மண்டபம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் நன்மை பயக்கப்போகிறது.
மாகாண சபை ஆளுநர்கள் தற்போது பதவி விலகியுள்ளார்கள். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். மாகாண சபைத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்கு பிரச்சினை இருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்பட வேண்டும்.புதிய முறைமையில் காணப்படும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஆபத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டு நீக்கப்பட்ட பின்பே தேர்தலுக்கு செல்ல வேண்டும்.'
அதற்கு முன்னர் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அளவில் ஜனாதிபதித் தேர்தல் வந்து விடும். எதை முதலில் செய்யப் போகின்றார்கள் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.-என்றார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் சட்ட ஆலோசகர் எம். சிவசுப்பிரமணியம்,கண்டி ட்ரான்ஸ் கல்வ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. எம். ரபீக், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் எஸ். எம். ரிஸ்வி மற்றும் வைத்தியதிகாரி சாபி, சட்டத்தரணி பஸ்லின் வாஹிட், நளீர் மற்றும் சாதீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
[ஊடகப் பிரிவு]