இலண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாரென்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை, குற்றவாளியென இனங்கண்ட இலண்டன் - வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம், அவருக்கு எதிராக, பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு, பிரித்தானியாவின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அதிகாரி, பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் எச்சர்ந்தப்பங்களிலும் கைதுசெய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரான பிரியங்கா பெர்ணான்டோ குறித்த வழக்கில் சமூகமளிக்கவேண்டுமென ஏற்கனவே நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவரோ அல்லது அவர் தரப்பிலிருந்து எவரும் நீதிமன்றில் சமூகமளித்திருக்கவில்லை.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தின் போது (2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி) இலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானியா வாழ் தமிழர்களால் பாரிய எதிர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது, தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியான பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ, தூரகத்துக்கு வெளியே வந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை தனது தொலைபேசியில் படம் பிடித்ததுடன் அவர்களைப் பார்த்து, கழுத்ததை வெட்டுவேன் என்ற சமிக்ஞையுடனான கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தாரென, அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.